அனைத்துலக பருவநிலை இலக்குகளை அடைய நாடுகள் தகுந்த திட்டங்களைச் செயல்படுத்தவேண்டும், இதன் தொடர்பில் தங்களின் முன்னேற்றத்தைத் தெரியப்படுத்தவேண்டும் என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ கூறியுள்ளார். இதன் தொடர்பிலான இலக்குகளை அடைவதில் நாடுகள் பொறுப்பேற்கவும் வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பெரிய இலக்குகளை வரைவதுடன் வேலை முடிந்துவிடாது என்பதே இதற்கு அர்த்தம் என்றும் திருவாட்டி ஃபூ சுட்டினார்.
சிங்கப்பூர் அனைத்துலக தண்ணீர் மாநாட்டின் ஓர் அங்கமாக நடைபெற்ற 'கிளீன்என்வைரோ' எனும் கலந்துரையாடலில் திருவாட்டி ஃபூ பேசினார். நீடித்த நிலைத்தன்மையைப் பொறுத்தவரை தான் வரைந்துள்ள தேசிய திட்டங்களைச் செயல்படுத்த சிங்கப்பூர் கடமைப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.
அதையும் தாண்டி எவ்வாறு தன்னை மேம்படுத்திக்கொள்ளலாம் என்பதையும் சிங்கப்பூர் ஆராயும் என்றும் அவர் கூறினார்.
'சிங்கப்பூர் பசுமைத் திட்டம் 2030'இன்படி, 2030ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூர், ஐந்து வெள்ளியாக இருக்கும் ஒரு டன் கரியமில வாயு வெளியேற்றத்திற்கான கரிம வரியை 50லிருந்து 80 வெள்ளி வரை உயர்த்தும்.

