மூத்த குடிமக்களிடன் நட்பு ஏற்படுத்திக்கொண்டு அவர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து சட்டவிரோதமாகப் பணம் எடுத்த பெண்ணுக்கு நேற்று பத்து மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
48 வயது சூ லே பிங் தன் மீது சுமத்தப்பட்ட ஏமாற்றுக் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.
2019ஆம் ஆண்டு மத்தியில் அவர் 'என்டியுசி ஹெல்த்' நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். தனது வேலையின் ஒரு பகுதியாக மூத்த குடிமக்கள் ஐவரை அவர் வாராவாரம் சந்தித்தார்.
மூத்த குடிமக்களின் மனநிலை, வாழ்க்கைச் சூழல், மருந்து நிர்வாகம், அண்மையில் கீழே விழ நேர்ந்ததா, எடை குறைந்திருக்கிறதா போன்ற விவரங்களை அவர் சேகரிப்பார். அரை மணி நேரச் சந்திப்பிற்கு நிறுவனம் அவருக்கு ஏழு வெள்ளி பணம் தரும்.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அவர் 84 வயது திருவாட்டி லிம் சியூ எங்கிடம் நட்பு ஏற்படுத்திக்கொண்டார். மருந்து வாங்கித் தரும்படி வேண்டிய திருவாட்டி லிம் சூவிடம் தனது வங்கி அட்டையைத் தந்தார். அதில் இருந்து சூ ஆயிரம் வெள்ளியை எடுத்துக்கொண்டதாகக் கூறப்பட்டது. ஆனால் 50 வெள்ளி எடுத்ததாக முதியவரிடம் தெரிவித்தார்.
மொத்தம் 26 சம்பவங்களில் கிட்டத்தட்ட $18,000 சூ ஏமாற்றி எடுத்துக்கொண்டதாகக் கூறப்பட்டது.
ஏமாற்றிய குற்றத்துக்கு பத்தாண்டு வரையிலான சிறைத்தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கலாம்.

