சிங்கப்பூர், இந்தோனீசியாவிடம் இருந்து பசுமை எரிசக்தியை இறக்குமதி செய்வதற்கான 6.83 பில்லியன் மதிப்புமிக்க திட்டத்திற்கு இரண்டு நாடுகளும் இணங்கியுள்ளன.
இதற்காக இந்தோனீசியாவின் ரியாவ் தீவுகளில் நான்காயிரம் ஹெக்டேர் பரப்பளவு நிலத்தில் சூரியசக்தியில் இருந்து மின்சாரம் தயாரிப்பதற்கான கட்டமைப்பும் மின்சேமிப்புக் கலனும் கட்டப்படும்.
பின்னர் அங்கிருந்து கடலடி கம்பிவடத்தின் மூலம் மின்சாரம் சிங்கப்பூருக்கு அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
2032ல் இந்தத் திட்டம் நிறைவடைந்து மின்சாரம் சிங்கப்பூருக்கு இறக்குமதியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூரின் மொத்த மின்சாரத் தேவையில் எட்டு விழுக்காட்டை பூர்த்திசெய்ய இது போதுமானதாய் இருக்கும். திட்டம் நிறைவடையும்போது உலகின் ஆகப் பெரிய சூரியசக்தி மின்சாரத் தயாரிப்பு, மின்கலன் கட்டமைப்பாக அது விளங்கும்.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் இதற்கான ஏலக்குத்தகை அறிவிக்கப்படும் என்று திட்டத்துக்குப் பொறுப்பேற்றுள்ள நிறுவனங்கள் கூறின.
மேலும் லாவோஸில் இருந்து தாய்லாந்து, மலேசியா வழியாக புதுப்பிக்கக்கூடிய நீர்மின்சக்தியை சிங்கப்பூருக்கு இறக்குமதி செய்வதற்கான திட்டமும் பரிசீலனையில் உள்ளது.
ஆஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியில் தயாரிக்கப்படும் சூரிய மின்சக்தியை கடலடி கம்பி வடத்தின் மூலம் இறக்குமதி செய்வது குறித்தும் பரிசீலிக்கப்படுகிறது.

