பருவநிலை மாற்றத்துக்கு எதிரான முக்கிய அம்சங்கள்
இயற்கை அடிப்படையிலான தீர்வுகளும் உள்ளூர் குழுக்களின் செயல்பாடும் பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்க முக்கியமானவை என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
சிங்கப்பூர் அனைத்துலகத் தண்ணீர் வாரம் 2022ல் கலந்துகொண்டபோது அவர்கள் இந்தக் கருத்தை முன்வைத்தனர்.
நீரால் ஏற்படும் பாதிப்புகளான வெள்ளம், தண்ணீர்ப் பஞ்சம் ஆகியவை முதல் நீரின் தரம் வரையிலான பல்வேறு பிரச்சினைகளைக் கையாள்வதில் இயற்கை அடிப்படையிலான தீர்வுகளுக்கும் உள்ளூர் குழுக்களுக்கும் முக்கியப் பங்கு இருப்பதாக ஐக்கிய நாட்டுப் பருவநிலைக்கான பணிக்குழுவின் இணைத் தலைவர் டாக்டர் டெப்ரா ராபர்ட்ஸ் கூறினார்.
'நாடுகள் வருமுன் காக்க வேண்டும்'
பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான முயற்சிகளில் எப்போது எதைத் தொடங்கவேண்டும் என்ற நிச்சமற்ற தன்மையை எதிர்நோக்கினாலும் உலக நாடுகள் மேற்கொள்ளும் தற்காப்பு நடவடிக்கைகள் நிச்சயம் பலன் தரும் என்று வல்லுநர்கள் கருத்துரைத்துள்ளனர்.
பேரழிவு ஏற்படும்வரை காத்திருந்து அதற்குப் பிறகு நடவடிக்கை எடுக்கலாம் என்று நினைப்பது நிலைமையை மோசமாக்கலாம் என்றனர் அவர்கள்.
சிங்கப்பூர் அனைத்துலக தண்ணீர் வாரம் 2022ல் கலந்துகொண்டபோது அவர்கள் இவ்வாறு கூறினர்.
மரினா பே சேண்ட்ஸில் நடைபெற்ற கருத்தரங்கில் தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா, பிலிப்பீன்ஸ் உள்ளிட்ட நாடுகளின் வல்லுநர்கள் கலந்துகொண்டனர். பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் சவால்களைச் சமாளிக்க உலக நாடுகளின் அரசாங்கங்கள் முன்கூட்டியே திட்டமிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மத்திய அரசாங்கங் கள் இத்திட்டங்களை முன்னெடுத்துச் செயல்படும் மாநில அரசாங்கங்களுக்கு நிதியுதவி செய்வதுடன் வழிகாட்டுதலும் வழங்கலாம் என்று அவர்கள் கூறினர்.
கேளிக்கை விடுதிக்கு பெண்களைக் கடத்திய உரிமையாளருக்குச் சிறை
கேளிக்கை விடுதியில் பணிசெய்ய பெண்களைக் கடத்திய ஆடவருக்கு 41 மாதச் சிறைத்தண்டனையுடன் $27,365 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
ஜெய்ஹோ கிளப்பின் உரிமையாளரான 47 வயது அழகர் பாலசுப்பிரமணியம், அந்தப் பெண்களுக்கு இதுவரையில் சம்பளமே தரவில்லை என்று கூறப்பட்டது.
அவர்களின் கடப்பிதழ்களையும் கைத்தொலைபேசிகளையும் பறிமுதல் செய்ததுடன், தன் அனுமதியின்றி இந்தியா திரும்பினால் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று மிரட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டது. அவர்களில் இரு பெண்களை அவர் துன்புறுத்தியதாகவும் கூறப்பட்டது.

