தம்முடைய 13 வயது மகளின் அறையில் கேமராவை ஒளித்து வைத்து அவள் நிர்வாணமாக இருக்கும்போது காணொளி எடுத்தவருக்கு 18 வார சிறை தண்டனையும் ஒரு பிரம்படியும் விதிக்கப்பட்டுள்ளது.
கணவரின் செயலைக் கண்டுபிடித்த மனைவி காவல் துறையிடம் புகார் அளித்தார்.
43 வயதான அந்த ஆடவர் 2019ஆம் ஆண்டு ஒரு இரகசிய கேமிராவை வாங்கியதாகக் கூறப்பட்டது. அந்தக் கருவியில் காணொளிகள் எடுக்கும் அம்சம் இருந்தது.
ஜூரோங்கில் உள்ள தமது வீட்டில், மகளுடைய அறையில் அந்தக் கேமிராவை அவர் ஒளிவைத்தார். அதிலிருந்து நேரடியாக படங்கள் வருவதை உறுதிசெய்த பிறகு, மீண்டும் அறைக்குச் சென்று கேமிராவின் கோணத்தைச் சரிசெய்துள்ளார்.
காலையில் மகள் பள்ளிக்குக் கிளம்பும்போது, சிறுமி சீருடை அணியும் காட்சிகளை அவர் கேமிராவில் பதிவுசெய்தார். பின்னர், அதைத் தமது கைதொலைபேசியிலும், மடிக்கணினியிலும் போட்டு பார்த்தார். அடுத்த நாளும் இந்தச் செயலை மீண்டும் புரிந்துள்ளார்.
14 வயதுக்குக் குறைவான சிறுவர்கள் நிர்வாணமாக இருக்கும்போது, அவர்களை ஒளிந்திருந்து பார்ப்பவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், பிரம்படியும் அல்லது இரண்டுமே விதிக்கப்படும்.


