மூப்படையும் சமூகத்தினர் சிங்கப்பூரில் அதிகரித்துவரும் நிலையில் பல முதியவர்களைப் பாதிக்கும் ஒன்றாக மூட்டு தொடர்பான பிரச்சினை உருவெடுத்துள்ளது. இதைக் கருதி முதுமை மூட்டு அழற்சிக்கு ஆளாகும் நோயாளிகளுக்கென புதிய சிகிச்சைமுறைகளைக் கண்டறியும் முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
உள்ளூர் உயிர்தொழில்நுட்ப நிறுவனமான 'ஸ்டெமிஜென் தெரபியூடிக்ஸ்' இது தொடர்பான ஆராய்ச்சிக்காக $1.2 மில்லியன் நன்கொடையை நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக லீ கோங் சியன் மருத்துவப் பள்ளிக்கு வழங்கியுள்ளது.
நிறுவனம் அளிக்கும் தொகைக்கு நிகராக அரசாங்கமும் வெள்ளிக்கு வெள்ளி நிதி அளித்துள்ளது. இது தொடர்பான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானபோது, முழங்கால் மூட்டு தொடர்பான அழற்சிக்கு ஆளாகும் நோயாளிகளுக்குச் சிகிச்சைமுறைகளை உருவாக்குவது தொடர்பில் ஆராய்ச்சி கவனம் செலுத்தும் என்று தெரிவிக்கப்பட்டது.
"முதுமை மூட்டு அழற்சி பிரச்சினையானது 65 வயது, 65 வயதுக்கு மேற்பட்ட பிரிவினரில் 80 விழுக்காட்டினரை அதிகம் பாதிக்கிறது. மூத்தோரிடையே உடல் அளவில் இயலாமையை ஏற்படுத்தும் முதன்மைக் காரணியாகவும் இது உள்ளது. முதுமை மூட்டு அழற்சி மோசமடைவதைத் தவிர்ப்பதற்குத் தற்போது எந்தவொரு பலன்தரும் சிகிச்சைமுறையும் கிடையாது," என்று தேசிய சுகாதாரப் பராமரிப்புக் குழுமத்தைச் சேர்ந்த பேராசிரியர் பெஞ்சமின் சீட் கூறினார். இவர் குழுமத்தின் கல்வி, ஆராய்ச்சிப் பிரிவின் துணைத் தலைமை நிர்வாகியாவார்.
அறிகுறிகளைக் கொண்டு வலிக்கு நிவாரணம் அளித்தல், வீக்கத்தைக் குறைக்க ஸ்டீராய்டு ஊசி போடுதல், முழங்கால் அறுவை சிகிச்சை செய்தல் போன்ற வழிமுறைகளே தற்போது சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படுகின்றன.
தகுதியுடைய மீள்உருவாக்க மருந்து விஞ்ஞானிகள், பயிற்சியாளர்கள் ஆகியோரின் பயிற்றுவிப்புக்கு ஆதரவாகவும் நிதி ஆதரவு வழங்கும் என்று 'ஸ்டெமிஜென்' தலைமை நிர்வாகி ஜேம்ஸ் சியா கூறினார்.
நிதியிலிருந்து இரண்டு திட்டங்கள் ஆதரவு பெறவுள்ளதாக பேராசிரியர் சீன் குறிப்பிட்டார்.
முப்பரிமாண அச்சில் 'தண்டு உயிரணு' ஏற்றப்பட்ட எலும்பு பதியம் ஒன்றை உருவாக்குவது அதில் ஒன்றாகும். முதுமை மூட்டு அழற்சி பிரச்சினை உள்ள நோயாளிகளின் மூட்டுகளைச் சுற்றியுள்ள குருத்தெலும்பு மீண்டும் உருவாகுவதற்கான மருந்தைக் கண்டுபிடிப்பது மற்றொரு திட்டமாகும்.
தண்டு உயிரணு, மீள்உருவாக்க மருந்து ஆராய்ச்சிக்காக கடந்த ஈராண்டுகளில் ஒவ்வோர் ஆண்டிலும் $10 மில்லியன் மானியங்கள் வழங்கப்பட்டுள்ளதாக என்டியு பேச்சாளர் குறிப்பிட்டார்.
மூப்படையும் சமூகத்தினருக்கு உதவியாக மருத்துவத்துறை, தொழில்துறை பங்காளிகளுடன் நம்பிக்கையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் நேற்றைய நிகழ்வில் கூறப்பட்டது.

