பிரதமர் லீ சியன் லூங் பத்தாண்டுகளுக்கு முன் தமது சமூக ஊடகப் பக்கங்களைத் துவங்கியபோது, எதை எதிர்பார்ப்பது என்று அறியாத நிலையில் இருந்ததாக நேற்று ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் குறிப்பிட்டார்.
"இருப்பினும் இணையவாசிகளுடன், பொதுமக்களுடன் நேரடியாக இணைவதற்கு அது ஒரு நல்ல வழியாகத் தெரிந்தது," என்று பதிவில் கூறியிருந்தார்.
ஃபேஸ்புக் தளத்தில் திரு லீ 2012ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதியன்று இணைந்தார். தற்போது இத்தளத்தில் அவரை 1.7 மில்லியன் பேர் பின்தொடர்வதாக அறியப்படுகிறது.
மகிழ்ச்சியளிக்கும், ஆச்சரியம் தரும், தகவல் நிறைந்த, சில நேரங்களில் திகைப்பும் ஊட்டும் அனுபவமாகத் தமது சமூக ஊடகப் பயணம் இதுவரை இருந்துள்ளதாக திரு லீ குறிப்பிட்டார்.
ஒருசில பதிவுகளுக்குப் பெரும் வரவேற்பு, வேறு சில பதிவுகளுக்கு எதிர்பார்த்த வரவேற்பு இல்லாதது குறித்துத் தாம் அவ்வப்போது நினைத்துப் பார்த்ததையும் அவர் பகிர்ந்துகொண்டார்.
"சமூக ஊடகங்கள் பெருமளவில் மாறிவிட்டன. நமது சமூக வழக்கங்கள் சிலவற்றையும் பலவாறு மாற்றிவிட்டன," என்ற திரு லீ, தமக்கு ஆதரவு அளிக்கும் இணையவாசிகளுக்கு தமது நன்றியையும் தெரிவித்தார்.

