அனைத்து பிரிவுகளிலும்
'சிஓஇ' கட்டணம் இறக்கம்
அனைத்து வாகனப் பிரிவுகளிலும் வாகன உரிமைச் சான்றிதழ் (சிஓஇ) கட்டணங்கள் சரிவு கண்டுள்ளன. 1,600சிசி வரையிலான கார்களுக்குரிய சிஓஇ கட்டணம், கடந்த ஏலக்குத்தகையைக் காட்டிலும் 5.9% குறைந்து, $68,699 எனப் பதிவானது. 1,600சிசிக்கு மேற்பட்ட பெரிய கார்களுக்குரிய சிஓஇ கட்டணம், கடந்த ஏலக் குத்தகையைக் காட்டிலும் 8.5% குறைந்து, $90,002 என முடிந்தது. சரக்கு வாகனங்களுக்கான சிஓஇ, 5.3% குறைந்து $52,002 என்றானது. மோட்டார்சைக்கிள்கள் பிரிவுக்கான சிஓஇ கட்டணம், தொடர்ந்து இறக்கம் கண்டு வருகிறது. 6.7% குறைந்து $9,801 என பதிவாகியது.
பொதுப் பிரிவு வாகனங்களுக்கான சிஓஇ கட்டணம், $99,999ல் இருந்து 4.2% குறைந்து $95,801 எனப் பதிவானது. பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையிலான தற்போதைய ஒதுக்கீடு காலகட்டத்தில் நேற்று நடந்த ஏலக்குத்தகையே கடைசியாகும். மே முதல் ஜூலை வரையிலான ஒதுக்கீடு காலகட்டத்தில் கூடுதலாக 14.3% வாகன உரிமைச் சான்றிதழ்கள் இருக்கும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் முன்னதாக அறிவித்தது.
மருத்துவ சோதனை: கொவிட்-19
சிகிச்சைக்கு சீனப் பாரம்பரிய மருந்து
கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட சிலருக்கு சிகிச்சையளிக்க, பாரம்பரிய சீன மருந்தான 'லியன்ஹுவா சிங்வென்' மாத்திரைகள் உதவுவதன் தொடர்பில் மருத்துவ சோதனைத் திட்டம் ஒன்று தற்போது நடந்துவருகிறது. தற்போது வழங்கப்படும் மருத்துவச் சிகிச்சைமுறைக்கு துணையாக இந்த மருந்து எந்த அளவுக்குப் பலனளிக்கும் என்பது ஆராயப்படுவதாக சுகாதார அறிவியல் ஆணையம் நேற்று தெரிவித்தது. கொவிட்-19க்கு எதிராக முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டோர், மிதமான கொவிட்-19 அறிகுறிகளுடன் வீட்டில் குணமடையும் நிலையில் இந்த மருந்தை உட்கொள்வதன் சாத்தியம் ஆராயப்பட்டு வருகிறது. இதே 'லியன்ஹுவா சிங்வென்' மருந்து மாத்திரைகளை கொவிட்-19 தொற்றைத் தடுக்கவும் போக்கவும் பயன்படுத்தலாம் என்று சமூக ஊடகங்களில் கடந்த ஆண்டு வலம்வந்த செய்திக்கு எதிராக ஆணையம் முன்னர் எச்சரிக்கை விடுத்திருந்தது.
தேர்வில் மோசடி செய்த பயிற்சி
வழக்கறிஞர்கள் குறித்து சங்கம்
வழக்கறிஞர் தகுதியை நிர்ணயிக்கும் தேர்வில் பயிற்சி வழக்கறிஞர்கள் மோசடி செய்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் அவர்கள் மீண்டும் விண்ணப்பித்தால், அவர்களின் விண்ணப்பங்கள் மிகுந்த கவனத்துடன் பரிசீலிக்கப்படும் என்று வழக்கறிஞர்கள் சங்கம் நேற்று தெரிவித்தது. "வழக்கறிஞராகும் தகுதி இல்லை என்று சங்கம் தீர்மானித்தால், அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்," என்றது சங்கம். தங்களின் 2020 வழக்கறிஞர் தேர்வில் 11 பயிற்சி வழக்கறிஞர்கள் மோசடி செய்திருந்தது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து சங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர்களைத் தள்ளுவண்டி மோதித் தள்ளிய சம்பவம்
ஈசூனில் உள்ள ஷெங் சியோங் பேரங்காடியில், கீழ் நோக்கிச் சென்று கொண்டிருந்த தானியங்கு பாதையில் நின்றிருந்த வாடிக்கையாளர்கள் இருவர்மீது தள்ளுவண்டி ஒன்று மோதிய சம்பவம் கடந்த பிப்ரவரியில் நடந்தது. அதையடுத்து, சமூக ஊடகத் தளங்களில் அந்தச் சம்பவத்தைக் காட்டும் சிசிடிவி கேமரா காட்சிகள் வலம்வருகின்றன. பேரங்காடி ஊழியர் தள்ளுவண்டியில் இருந்த அட்டைப்பெட்டிகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தபோது கேட்பாரற்றுக் கிடந்த அந்தத் தள்ளுவண்டி தானியங்குப் பாதைமீது வேகமாக உருண்டு இருவர்மீது மோதிவிட்டது.
(படம்: ஷெங் சியோங்)

