நீடித்த நிலைத்தன்மை முயற்சிகளை மேலும் அதிகமான பள்ளிகள் மேற்கொண்டு தங்களின் மாணவர்களை, சுற்றுப்புறத் தூதர்களாக உருமாற்ற வேண்டும் என்று அதிபர் ஹலிமா யாக்கோப் கூறியுள்ளார்.
"நெருக்கடி அளிக்கும் ஒன்றாக பருவநிலை நடவடிக்கைகள் இருந்து வருகின்றன. இந்த விவகாரத்தைத் தாமதிப்பதும் ஆகாது," என்று மீ டோ பள்ளிக்கு நேற்று சென்றிருந்த திருவாட்டி ஹலிமா குறிப்பிட்டார்.
கல்வி அமைச்சு கடந்த ஆண்டு அறிவித்த 'சுற்றுப்புறத் தூதர்' திட்டத்திற்காக நான்கு பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
அதில் ஒன்று இந்த மீ டோ பள்ளியாகும்.
இப்பள்ளியின் நீடித்த நிலைத்தன்மை முயற்சிகள் 2007ஆம் ஆண்டிலேயே தொடங்கிவிட்டன.
சுற்றுப்புறத்தைப் பாதுகாத்தல், அதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகியவற்றை இந்தப் பள்ளி மாணவர்கள் கற்று வருகின்றனர்.
நாளை 'பூமி தினம்' அனுசரிக்கப்படுகிறது. இதைக் கொண்டாடும் வகையில் மாணவ சுற்றுப்புறத் தூதர்கள் மற்றும் பள்ளிப் பணியாளர்கள் சிலருடன் அதிபர் ஹலிமா நேற்று மரம் ஒன்றை நட்டார்.
"பள்ளிச் சூழலின் முழுமையான கற்றல் ஒருங்கிணைப்பில் சுற்றுப்புற நிலைத்தன்மை தொடர்பான ஒரு கலாசாரத்தை மேலும் அதிகமான பள்ளிகள் உருவாக்க வேண்டும்," என்று அதிபர் ஹலிமா கேட்டுக்கொண்டார்.

