நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் புதன்கிழமை ஜி20 நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் இரண்டாம் கூட்டத்தில் கலந்துகொண்டார்.
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் அனைத்துலக தலைவர்களையும் அவர் சந்தித்தார்.
இந்தக் காலகட்டத்தில் உலகப் பொருளியல் நிலைப்பாட்டை கட்டிக்காக்கும் வகையில் நிதி, நாணய கொள்கைகளை ஒருமுகப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது என்பதை அந்தக் கூட்டத்தில் நிதி அமைச்சர்கள் ஏற்றுக்கொண்டதாக அமைச்சர் வோங் ஃபேஸ்புக்கில் குறிப்பிட்டார்.
உலகளாவிய பொதுச் சுகாதார ஏற்பாடுகளைப் பலப்படுத்துவது, பருவநிலை மாற்றத்தைச் சமாளிப்பது போன்ற நீண்டகால பிரச்சினைகள் குறித்தும் அமைச்சர்கள் விவாதித்தனர்.
"முக்கியமான அம்சங்களைச் சமாளித்து மேம்படுவது எப்படி என்பது பற்றி நாங்கள் நல்ல முறையில் பலவற்றையும் விவாதித்தோம்," என்று திரு வோங் குறிப்பிட்டார்.
நிதி அமைச்சர் ஏப்ரல் 25ஆம் தேதி வரை அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
"அசாதாரணமான ஒரு சூழலில் நாங்கள் சந்தித்து வருகிறோம்," என்று திரு வோங் கூறினார்.
நாட்டுக்கு நாடு என்ற அணுகுமுறையைக் கைக்கொள்வது சிரமம். ஒன்றாகச் சேர்ந்து வலுவாக மேம்படும் வகையில் பலமிக்க பலதரப்பு ஒத்துழைப்பு தேவைப்படுகிறது என்று திரு வோங் குறிப்பிட்டார்.
"பாதை நீண்ட நெடும் பாதையாக, நிச்சயமில்லாததாக தெரிகிறது. ஆனால், இந்தோனீசியாவின் தலைமையுடன் ஜி20 அமைப்பு பலதரப்பு தன்மையைப் பலப்படுத்தி ஒன்றாகச் சேர்ந்து வலுவாக மேம்படும்," என்று தான் நம்புவதாகவும் அவர் கூறினார்.
இந்தோனீசிய நிதி அமைச்சரையும் அமெரிக்காவில் திரு வோங் சந்தித்தார்.
திரு வோங், புதன்கிழமை ஆசிய பசிபிக் நாடுகளைச் சேர்ந்த நிதி அமைச்சர்களையும் இதர நாடுகளின் நிதி அமைச்சர்களையும் சந்தித்தார்.
அதோடு, அரசாங்கங்களுக்கு இடைப்பட்ட அமைப்புகளின் தலைவர்களையும் திரு வோங் சந்தித்தார். சிங்கப்பூருடன் உலக வங்கி சேர்ந்து செயல்படும் புத்தாக்க வழிகளைப் பற்றி உலக வங்கிக் குழுமத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிதித்துறை அதிகாரியுமான அன்ஷுலா காந்துடன் திரு வோங் விவாதித்தார்.

