கல்வி அமைச்சு நடத்தும் தொடக்கப்பள்ளியில் சேர விரும்பும் அனைத்துலக மாணவர்கள், புதிய கேம்பிரிட்ஜ் ஆங்கிலத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
கல்வி அமைச்சு நடத்திவந்த ஆங்கில மொழித் தேர்வுக்குப் பதிலாக இது இடம்பெறுகிறது. புதிய தகுதித் தேர்வு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியாக இடம்பெறும் கேம்பிரிட்ஜ் ஆங்கில மதிப்பீட்டுத் தேர்வாகும்.
அது, கேம்பிரிட்ஜ் ஆங்கிலத் தகுதித் தேர்வில் மாணவர் பெறும் மதிப்பெண்ணைக் கொண்டு அவரின் செயல்திறனை முடிவு செய்யும்.
கல்வி அமைச்சின் தொடக்கப்பள்ளிகளில் 2023 மாணவர் சேர்க்கையில் தொடங்கி வெளி நாட்டு மாணவர்கள் தங்கள் கேம்பிரிட்ஜ் ஆங்கிலத் தகுதித் தேர்வு முடிவைத் தாக்கல் செய்யவேண்டி இருக்கும்.
விண்ணப்பங்கள் ஜூலையில் தொடங்கும். கல்வி அமைச்சின் பள்ளிகளில் தொடக்கப்பள்ளி 2ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை, உயர்நிலை 1 முதல் 3 வரை சேர விரும்பும் வெளிநாட்டு மாணவர்கள், சிங்கப்பூரில் பிப்ரவரி, செப்டம்பர் மாதங்களில் நடக்கும் அனைத்துலக மாணவர்களுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறையில் பங்கெடுக்க வேண்டும்.
அந்தத் தேர்வில் வெற்றி பெறுவோருக்கு மட்டும் பொருத்தமான பள்ளியில் உள்ள இடத்திற்கு ஏற்ப அனுமதி கிடைக்கும் என்று அமைச்சு நேற்று தெரிவித்தது.
தேவைப்படும் மதிப்பெண் விவரங்களை www.moe.gov.sg/international-students/aeis. என்ற முகவரியில் தெரிந்துகொள்ளலாம்.
உயர்நிலைப் பள்ளிகளில் சேர விரும்பும் வெளிநாட்டினருக்கு நுழைவுத் தேர்வில் மாற்றம் இல்லை. அனைத்துலக மாணவர் களுக்கான மாணவர் சேர்க்கை தேர்வு பற்றிய விவரங்களை www.moe.gov.sg/international-students/aeis. முகவரியில் அறியலாம்.
வெளிநாடுகளில் இருந்து திரும்பும் சிங்கப்பூரர்களுக்கு, இடம் இருக்கும் பட்சத்தில், அவர்களின் வீட்டிற்கு அருகே இருக்கும் பள்ளிகளில் இடம் அளிக்கப்படும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

