சிங்கப்பூரில் கொவிட்-19 தொடங்கியதற்குப் பிறகு முதன்முதலாக மே 7ஆம் தேதி இஸ்தானா பிரதானக் கட்டடம் பொதுமக்களுக்குத் திறந்துவிடப்படும்.
தொழிலாளர் தினம், நோன்புப் பெருநாள் ஆகியவற்றைக் குறிக்கும் வகையில் இஸ்தானா பொது வரவேற்பு நிகழ்ச்சி மே 7ஆம் தேதி நடைபெறுகிறது.
இஸ்தானா செல்ல விரும்புவோர் முன்னதாகவே நுழைவுச்சீட்டுகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று அதிபர் அலுவலகம் அறிக்கை ஒன்றில் நேற்று தெரிவித்தது.
ஒருவருக்கு ஐந்து நுழைவுச்சீட்டுகள் கொடுக்கப்படும். அவர்கள் காலை 9 மணி முதல் 11 மணி வரை அல்லது பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை எந்த நேரத்தை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
இஸ்தானா திடல் நுழைவு இலவசம். பிரதான கட்டடத்திற்குள் செல்ல அனுமதி பெற வேண்டும். அதற்கு நான்கு வயதும் அதற்கு அதிக வயதும் உள்ள சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகளுக்குக் கட்டணம் $2. நான்கு வயதுக்குக் கீழ் உள்ள பிள்ளைகளுக்கு அனுமதி இலவசம்.

