சிங்கப்பூரில் தன்னுடைய ஐந்தாவது கணினித் தகவல் சேமிப்பு நிலைய விரிவாக்கத்தை US$86 மில்லியன் ($117 மில்லியன்) செலவில் நிறைவேற்றி இருப்பதாக அமெரிக்காவின் கணினித் தகவல் நிலைய நிறுவனமான 'ஈக்கு வினிக்ஸ்' அறிவித்து உள்ளது.
மின்னிலக்க உள்கட்டமைப்பு வசதிகளுக்குத் தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதை அது சுட்டியது. ஜூரோங் வெஸ்ட்டில் இருக்கும் தஞ்சோங் கிளிங்கில் அமைத்துள்ள 'எஸ்ஜி5' எனப்படும் அந்தக் கணினித் தகவல் நிலையத்தில் இந்நிறுவனம், US$144 மில்லியன் முதலீடு செய்தது.
இப்போது அதற்கு மேலும் புதிதாக முதலீடு செய்து ஐந்தாவது விரிவாக்கத்தைப் பூர்த்தி செய்து இருக்கிறது.
இந்த விரிவாக்கம் காரணமாக அந்த நிலையத்தில் தகவல் சேமிப்புக்கான இடம் இரண்டு மடங்கிற்கும் அதிகமாகக் கூடி இருக்கிறது.
இப்போதைய, புதிய வாடிக்கையாளர்களின் தேவையை நிறைவேற்றுவதற்குத் தோதாக அந்தக் கணினித் தகவல் நிலையத்தில் 2,950க்கும் மேற்பட்ட தகவல் சேமிப்புப் பெட்டகங்கள் உள்ளன.
எஸ்ஜி5 முற்றிலும் விரிவடையும்போது இந்தச் சேமிப்புச் சாதன இட வசதி இன்னும் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, இது பற்றி கருத்து கூறிய இந்த நிறுவனத்தின் தெற்காசியாவுக்கான நிர்வாக இயக்குநர் திருவாட்டி லியோங் யீ மே, மின்னிலக்கப் பொருளியலில் புத்தாக்கம், ஈடுபாடு, வெற்றி ஆகியவற்றைச் சாதிக்க நிறுவனங்களுக்கு அதிக ஆற்றல் தேவைப்படுகிறது என்று கூறினார்.
இந்த ஆற்றலை பொது, தனியார் நிறுவனங்களுக்கு ஏற்படுத்தித் தர தங்களுடைய மின்னிலக்க உள்கட்டமைப்பு வசதிகள் உதவுகின்றன என்றும் அவர் கூறினார்.
'இன்லிகோ நெட்வொர்க்ஸ்' என்ற கடலடிக் கம்பிவட நிறுவனத்தை இந்த நிறுவனம் தேர்ந்தெடுத்துக் கொண்டு இருக்கிறது.
இதன்மூலம் இந்த நிறுவனம் தனது ஆசிய கடலடிக் கம்பிவட முறைக்கான கம்பிவட தரை நிலையத்தை சிங்கப்பூரில் அமைக்க முடியும் என்று நிறுவனம் தெரிவித்தது.
அந்த 18,000 கி.மீ. கம்பிவட முறை 14 முக்கிய கடலடி கம்பிவட முறையில் ஒன்றாகும். அதனுடன் சிங்கப்பூரில் உள்ள இந்த நிறுவனத்தின் கணினித் தகவல் நிலையம் இணைக்கப்பட்டுள்ளது.
புதிய கம்பிவட முறை சிங்கப்பூர், இந்தோனீசியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளுக்கு இடையில் அதிக ஆற்றலைக் கொண்ட இணைப்பை ஏற்படுத்தித் தரும். இதன் கட்டுமானம் இந்த ஆண்டில் தொடங்கும் எனத் தெரிகிறது.

