உணவுத் தட்டுப்பாட்டால் சிரமப்படும் வசதிகுறைந்த குடும்பங்களுக்கு நிதி திரட்டும் நோக்கத்தில் சிங்கப்பூர் உணவு வங்கி, 'என்எஃப்டி' எனும் மின்னிலக்க வர்த்தக உலகில் காலடி எடுத்து வைக்கிறது. 'என்எஃப்டி' மூலம் கலைப் பொருள்கள், கேலிச் சித்திரங்கள், விளையாட்டுகள் போன்றவற்றை ஏலத்தில் விடலாம்.
சிங்கப்பூர் உணவு வங்கியின் அடையாளச் சின்னமான கூரிமோ மூன்று வகையான 'என்எஃப்டி'களாக உருவாக்கப்பட்டு ஏலத்துக்கு வந்துள்ளது.
வங்கியின் பத்தாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் இந்த ஆண்டு 12 மில்லியன் வெள்ளியைத் திரட்டுவது இலக்கு. வங்கி அட்டை திட்டத்தின்கீழ், திரட்டப்படும் நிதி உணவு வங்கி அட்டைகளில் நிரப்பப்படும். வசதி குறைந்தோர் ஓராண்டுக்கு இந்த அட்டையைப் பயன்படுத்தி உணவை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.
பத்தாயிரம் பேர் இதனால் பலனடைவர் என்று கூறப்பட்டது. ஒவ்வொரு மாதமும் அவர்களது உணவு வங்கி அட்டையில் நூறு வெள்ளி நிரப்பப்படும்.
அட்டையைப் பயன்படுத்தி 60க்கும் மேற்பட்ட இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும் தானியக்க உணவு, பானம் வழங்கும் இயந்திரங்களில் இருந்து உணவுப் பொருள்களையும் பானங்களையும் பெற்றுக்கொள்ளலாம். இதற்கான 'என்எஃப்டி' ஏலம் ஓப்பன்சீ தளத்தில் இம்மாதம் 21 முதல் 24ஆம் தேதி வரை இடம்பெறும்.

