நோன்புப் பெருநாள்வரை முட்டை விலையைக் குறைக்கும் 'ஜயண்ட்'
'ஜயண்ட் சிங்கப்பூர்' பேரங்காடி நோன்புப் பெருநாளை முன்னிட்டு ஏப்ரல் 21 முதல் மே 3ஆம் தேதி வரை முட்டை விலையைக் குறைப்பதாக அறிவித்திருக்கிறது.
அனைத்து 'ஜயண்ட் சிங்கப்பூர்' பேரங்காடிகளிலும் $7.50க்கு விற்கப்படும் 30 முட்டைகள் கொண்ட பொட்டலத்தின் விலை ஒரு வெள்ளி குறைக்கப்படும் என்று அது கூறியது. ஆனால் ஒருவர் அதிகபட்சமாக இரண்டு பொட்டலங்கள் மட்டுமே வாங்கலாம்.
'ஃபேர்பிரைஸ்' பேரங்காடியும் ஏப்ரல் 27ஆம் தேதிவரை 30 முட்டைகள் கொண்ட பொட்டலத்துக்கு 55 காசு தள்ளுபடி வழங்குகிறது. வழக்கமாக $7.50க்கு விற்கப்படும் இந்தப் பொட்டலத்தின் விலை $6.95க்குக் குறைக்கப்பட்டுள்ளது.
உள்ளூர்ப் பண்ணையில் பரவிய கிருமித்தொற்று, உக்ரேன் நெருக்கடி, கோழித் தீவன விலை அதிகரிப்பு, எரிசக்தி, போக்குரவத்துச் செலவு உயர்வு போன்றவற்றால் சிங்கப்பூரில் அண்மையில் முட்டை விலை உயர்ந்தது.
'பிரைஸ் காக்கி'யில் ரெட்மார்ட் மளிகைப் பொருள்கள்
பயனீட்டாளர்கள் இனி கூடுதலான மளிகைப் பொருள்களின் விலைகளை ஒப்பிட்டுப் பார்க்க இயலும். ரெட்மார்ட் இணைய விற்பனைத்தளத்தின் மளிகைப் பொருள்கள் சில விலை ஒப்பீட்டுச் செயலியான 'பிரைஸ் காக்கி'யில் சேர்க்கப்பட்டுள்ளது இதற்குக் காரணம்.
செயலியில் இணையத்தளம் ஒன்று இணைக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை.
நேற்று முதல் ரெட்மார்ட் இணையத்தளத்தில் அதிகம் விற்பனையாகும் நூறு மளிகைப் பொருள்களின் விலை இந்தச் செயலியில் சேர்க்கப்பட்டுள்ளது. முட்டை, பால், அரிசி போன்றவை இதில் அடங்கும்.
5,500க்கும் அதிகமான பொருள்களின் விலையை பயனீட்டாளர்கள் ஒப்பிட்டுப் பார்க்க இது வகைசெய்துள்ளது.
இந்த ஆண்டு இறுதிக்குள் பத்தாயிரம் பொருள்களின் விலையைச் செயலியில் இணைக்க 'பிரைஸ் காக்கி' முனைந்துள்ளது.
கடலில் சென்ற படகில் இருந்து திருடியதாக ஒன்பது பேர் கைது
கூசு தீவுகளுக்கு அருகே இழுத்துச்செல்லப்பட்ட பெரிய படகில் இருந்து உலோகத் துண்டுகளைத் திருடியதாக ஒன்பது ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 30 வயதுக்கும் 42 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
கடலோரக் காவல்படையினர் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பத்தரை மணியளவில் இழுத்துச் செல்லப்பட்ட படகுக்கு அருகே சந்தேகத்துக்குரிய வகையில் சென்ற சிறு படகைக் கண்டனர்.
பெரிய படகை வெளிநாட்டில் பதிவுசெய்யப்பட்ட இழுவைப் படகு இழுத்துச் சென்றுகொண்டிருந்தது (படம்).
கடலோரக் காவல்படையினர் விரைந்து செயல்பட்டு சந்தேகிக்கப்பட்ட சிறிய படகைத் தடுத்து நிறுத்தினர்.
அப்போது பெரிய படகில் எட்டு ஆடவர்கள் இருந்ததாகக் கூறப்பட்டது. அவர்களில் இருவர் அதில் ஒளிந்திருந்தனர்.
ஆடவர்களிடம் கடப்பிதழ் போன்ற முறையான பயண ஆவணங்கள் ஏதும் இல்லை என்று கூறப்பட்டது. அவர்கள் சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாகக் கருதப்படுகிறது.
முதற்கட்ட விசாரணையில் இழுவைப் படகுச் சிப்பந்தி ஒருவருடன் இணைந்து ஆடவர்கள் எட்டு பேரும் உலோகத் துண்டுகளைத் திருடத் திட்டமிட்டது தெரியவந்துள்ளது.
ஒன்பது பேரையும் சிங்கப்பூர் கடலோரக் காவல்படை அதிகாரிகள் கைது செய்தனர். சிறு படகு, சில உலோகத் துண்டுகள், கத்தி போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஒன்பது பேர் மீதும் இன்று நீதிமன்றத்தில் திருட்டுக் குற்றம் சுமத்தப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஏழாண்டு வரையிலான சிறைத்தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்படலாம். சட்டவிரோதமாக சிங்கப்பூரில் நுழைந்த குற்றத்துக்கு ஆறு மாதச் சிறைத்தண்டனையும் குறைந்தது மூன்று பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.

