நொவீனாவில் அமைந்திருக்கும் 'வேஸ்குலர் & இன்ட்டர்வென்ஷனல் சென்டர்' மருந்தகத்தை நிர்வகிக்கும் நிறுவனத்தில் பணியாற்றிய 47 வயது ஃபௌஸியா மட் பெர்லாம் எனும் மாது கிட்டத்தட்ட 550,000 வெள்ளியைத் தவறாகப் பயன்படுத்திய குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
இதன் தொடர்பில் அவர்மீது இரண்டு நம்பிக்கை மோசடிக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.
தொகை குறிப்பிடப்படாமல் கையெழுத்திடப்பட்ட காசோலைகளைத் தவறாகப் பயன்படுத்தியதையும், பணத்தை ஏமாற்றியதையும் அவர் ஒப்புக்கொண்டார். இதனையொட்டி நேற்று அவருக்கு மூன்று ஆண்டுகள் நான்கு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
தண்டனை விதிக்கும்போது இத்தகைய மேலும் இரண்டு குற்றச்சாட்டுகளும் கவனத்தில் கொள்ளப்பட்டன.
விநியோகிப்பாளருக்குச் செலுத்த வேண்டிய தொகையை ஏமாற்றியது, போலியான கொள்முதல் ரசீதுகள் தயாரித்தது, நிறுவனப் பணத்தை நண்பர்களின் வங்கிக் கணக்குக்கு மாற்றி பின்னர் அவர்களிடம் இருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டது உள்ளிட்ட குற்றங்களில் அவர் ஈடுபட்டது கண்டறியப்பட்டது.
ஃபௌஸியா, 2015ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் 2020 டிசம்பர் வரையான காலகட்டத்தில் நிர்வாக மேலாளராகப் பணியாற்றியபோது இவ்வாறு மோசடிச் செயல்களில் ஈடுபட்டார்.

