புதிய சமூக சேவை அமைப்புகளுக்கு நிதியுதவி
சமூக சேவைத் துறையைச் சேர்ந்த புதிய அமைப்புகளுக்கு உதவும் வகையில் புதிய நிதி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. புதிய அமைப்புகள் நிதி உதவி பெறுவது அவ்வளவு எளிதல்ல. எனவே, இந்தத் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. கொடை அமைப்பான 'தி மஜுரிட்டி டிரஸ்ட்'டால் நிர்வகிக்கப்படும் 'தி லாம் சூன் நியூ ஹொரைசன் ஃபண்ட்' எனும் நிதி நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. தேர்ந்தெடுக்கப்படும் சில புதிய சமூக சேவை அமைப்புகளுக்கு இந்த நிதித் திட்டம் அடுத்த மூன்று ஆண்டுகளில் $150,000 வரை நிதியுதவி வழங்கும். இந்த நிதித் திட்டத்துக்காகப் பதிவு செய்யப்பட்ட அறநிறுவனமான டிஎல் வாங் அறநிறுவனம் ஒரு மில்லியன் வெள்ளி நன்கொடை வழங்கியுள்ளது. தேர்ந்தெடுக்கப்படும் அமைப்புகள் தங்கள் தேவைக்கு ஏற்ப நிதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
66 பள்ளிவாசல்களில் 153,000க்கும் மேற்பட்டோருக்கு இடம்
நோன்புப் பெருநாள் காலை நடைபெறவுள்ள தொழுகையில் கலந்துகொள்ள 66 பள்ளிவாசல்களில் 153,000க்கும் அதிகமான இடங்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொவிட்-19 நெருக்கடிநிலை காரணமாக கடந்த ஆண்டு 17,192 இடங்கள் மட்டுமே வழங்கப்பட்டன. 2020ஆம் ஆண்டில் நோன்புப் பெருநாளின்போது பள்ளிவாசல்களில் அதற்கான சிறப்பு தொழுகை நடத்தப்படவில்லை. அடுத்த மாதம் 3ஆம் தேதியன்று நோன்புப் பெருநாள் கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு, தீவெங்கும் மொத்தம் 66 பள்ளிவாசல்களில் தொழுகை நடத்தப்படும். இம்முறை பள்ளிவாசல்களில் தொழுகை இரண்டு பிரிவுகளாக நடத்தப்படும். அவற்றில் கலந்துகொள்ள விரும்புவோர் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். 15 பள்ளிவாசல்களில் கூடுதல் கூட்டம் எதிர்பார்க்கப்படுவதால் அங்கு தொழுகை மூன்று பிரிவுகளாக நடத்தப்படும் என்று சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் நேற்று தெரிவித்தது.
கூடுதல் வெளிநாட்டு ஊழியர்கள் வெளியிடங்களுக்குச் செல்லலாம்
கூடுதல் வெளிநாட்டு ஊழியர்கள் இம்மாதம் 26ஆம் தேதி முதல் வெளியிடங்களுக்குச் செல்ல முடியும்.
வாரயிறுதி நாள்கள், பொது விடுமுறை நாள்களில் 50,000 வெளிநாட்டு ஊழியர்கள் வரையிலும் வாரநாள்களில் 25,000 பேர் வரையிலும் சமூக இடங்களுக்குச் செல்லலாம்.
ஒவ்வொரு முறையும் அவர்கள் எட்டு மணி நேரம் வரை அந்த இடத்தில் இருக்கலாம். வெளிநாட்டு ஊழியர்கள் தற்போது வாரயிறுதி நாள்களில் 30,000 பேர் வரையிலும் வாரநாள்களில் 15,000 பேர் வரையிலும் செல்ல அனுமதி உண்டு. அத்துடன் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத வெளிநாட்டு ஊழியர்களும் சமூக இடங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். பெரும்பாலான சூழல்களில் தடுப்பூசி போட்டுக்கொண்டதன் அடிப்படையிலான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதை முன்னிட்டு இந்த நடவடிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
விரும்பினால் இரண்டாவது 'பூஸ்டர்' தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்
60 வயதுக்கும் 79 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் விரும்பினால் இரண்டாவது 'பூஸ்டர்' எனப்படும் கூடுதல் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுகுறித்து நிபுணர் குழு இன்னும் பரிந்துரை செய்யவில்லை. முதல் கூடுதல் தடுப்பூசி போட்டு குறைந்தது ஐந்து மாதங்களுக்குப் பிறகு இரண்டாவது கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் நேற்று தெரிவித்தார்.
60 வயதும் அதற்கும் மேற்பட்டவர்களும் இரண்டாவது கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்பினால் இரவு 7 மணிக்கு முன்பு ஏதேனும் ஒரு தடுப்பூசி நிலையத்துக்கு முன்பதிவின்றி செல்லலாம்.

