காட்டுப்பன்றிகள், நீர்நாய்கள் ஆகியவற்றால் மனிதர்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள் அண்மையில் சிங்கப்பூரில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன.
வனவிலங்குகளை எவ்வாறு எதிர்கொள்வது என்று மனிதரில் பலருக்கும் தெரியாததே இதற்குக் காரணம் என்று கருதப்படுகிறது.
உள்ளூர் வனவிலங்குப் பாதுகாப்புக் குழுக்களும் தேசியப் பூங்காக் கழகமும் இணைந்து விலங்கு களுடன் சிறந்த சகவாழ்வை ஊக்குவிக்கும் வகையில் புதிய திட்டத்தை நேற்று தொடங்கின.
பூமி தினத்தை அனுசரிக்கும் விதமாக இந்நடவடிக்கை அமைந்தது.
நமது அக்கம்பக்க வனவிலங்குகள் எனப்படும் இத்திட்டத்தின் கீழ் இணையத்தளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வனவிலங்குகளைப் பற்றிய தகவல்களை அறிந்துகொள்ளவும் அவற்றை எதிர்கொள்ளும்போது செய்யவேண்டியவை என்ன, செய்யக்கூடாதவை என்னென்ன ஆகியவற்றைப் புரிந்துகொள்ளவும் இந்தத் தளம் வகைசெய்யும்.
பாதுகாப்பு நடவடிக்கைகளில் கூடுதலான பொதுமக்களை ஈடுபடுத்தும் நோக்கில் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும்.
இந்நிகழ்ச்சிகள் குறித்த தகவல்கள் இணையத்தளத்தில் வெளியிடப்படும்.
உதாரணத்திற்கு கிராஞ்சி கடலோர இயற்கைப் பூங்காவில் மரம் நடும் நிகழ்ச்சிகள், நீர்நாய்களைக் கண்டுபிடிக்கும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும்.
சிங்கப்பூரில் மறைந்துபோன இனமாகக் கருதப்பட்ட நீர்நாய்கள் எவ்வாறு இங்கு மீண்டும் வந்தன என்பது குறித்துப் பொதுமக்கள் இதில் அறிந்துகொள்ளலாம்.
வனவிலங்குகளுக்கு உணவளிப்பது, உணவுக் கழிவை முறையாக அப்புறப்படுத்தாமை உள்ளிட்ட மனித நடவடிக்கைகள் வனவிலங்குகளின் பழக்கங்களை எப்படி மாற்றக்கூடும் என்பது பற்றியும் வனவிலங்குகளின் இயற்கையான வாழ்விடங்கள் குறித்தும் பொதுமக்கள் இந்த இணையத் தளத்தில் தகவல் பெறலாம்.

