உணவுப் பொருள் தயாரிக்கும் நிறுவனங்கள், புதிய செய்முறைக் குறிப்புகளையோ அவற்றில் புரதவகைகளையோ பெரிய அளவிலான இயந்திரங்களில் சோதித்துப் பார்க்க செலவு அதிகம் பிடிக்கும். இந்த நிலை இனி மாறக்கூடும் என்று கருதப்படுகிறது.
சிறிய அளவில் புதிய உணவுத் தயாரிப்பு ஆய்வுக்கூடம் ஒன்று சிங்கப்பூரில் அமைக்கப்பட்டிருப்பது இதற்குக் காரணம்.
சிங்கப்பூர் தொழில்நுட்பக் கல்விக் கழகம், எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு, ஜூரோங் நகராண்மைக் கழகம் ஆகியவை இணைந்து 'ஃபுட்பிளாண்ட்' எனும் ஆய்வுக்கூடத்தை நேற்று தொடங்கியுள்ளன.
ஈரப்பதம் அதிகமுள்ள புரதச்சத்து நிறைந்த தாவர உணவுப் பொருள்களை சிறிய அளவில் தயாரிப்பதற்கு உரிய இயந்திரங்கள் இதில் உள்ளன.
ஆய்வு, மேம்பாட்டுப் பணிகளுக்கும் சிறிய அளவிலான உணவுத் தயாரிப்பிற்கும் 'ஃபுட்பிளாண்டை' பயன்படுத்தத் திட்டமிடுகிறது 'எஸ்ஜி புரோட்டீன்' நிறுவனம். இறைச்சிக்கு மாற்றான தாவர உணவுப்பொருள்களையும் கடலுணவு வகைகளையும் தயாரிக்கும் நிறுவனம் இது.
'ஃபுட்பிளாண்ட்' ஆய்வுக்கூடத்தைப் பயன்படுத்துவதன் மூலம் 90% வரை ஆய்வுக்கான செலவைக் குறைக்கலாம் என்று இதன் இணை நிறுவனரும் தலைமை நிர்வாகியுமான திரு டோமினிக் கல் கூறினார். தங்கள் சொந்த இடத்தில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்வது சிக்கலானாது, இதனால் மூலப் பொருள்கள் வீணாகும் என்றார் அவர்.
வெவ்வேறு வகைப் புரதங்களைப் பயன்படுத்தி வெவ்வேறு செய்முறைகளைப் பின்பற்றி சோதனைகளை மேற்கொள்வதற்கு இயந்திரம் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று அவர் விளக்கினார்.
2020ஆம் ஆண்டு இறுதியில் ஜூரோங்கில் தொடங்கப்பட்ட 'எஸ்ஜி புரோட்டீன்' நிறுவனம், இந்த ஆண்டு பிப்ரவரி முதல் முழுமையாகச் செயல்பட்டுவருகிறது.
புதிதாகத் தொடங்கப்பட்ட சில சிறிய நிறுவனங்கள், மிகக் குறைந்த அளவில்தான் கொள்முதல் செய்யும். அவற்றுக்குத் தேவைப்படும் உணவுப் பொருள்களை 'ஃபுட் பிளாண்டின்' சிறிய இயந்திரங்களைப் பயன்படுத்தித் தயாரிக்கத் திட்டமிடுகிறது 'எஸ்ஜி புரோட்டீன்'. கொள்முதல் அளவு அதிகரிக்கும்போது தங்கள் ஜூரோங் தொழிற்கூடத்தில் தயாரித்துக்கொள்ளலாம் என்றார் திரு கல்.
புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தவும் புதிய யோசனைகளை உருவாக்கவும் 'ஃபுட்பிளாண்ட்' களம் அமைத்துத்தரும் என்று அவர் குறிப்பிட்டார்.

