சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் பதவி விலகக்கூடும் என்ற தவறான எண்ணத்தைத் தோற்றுவிக்கும் கட்டுரையை வெளியிட்டதன் தொடர்பில் 'தி இண்டிபெண்டண்ட் சிங்கப்பூர்' செய்தி இணையத்தளத்தின்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொஃப்மா எனப்படும் இணையவழி பொய்ச் செய்திக்கும் சூழ்ச்சித் திறத்திற்கும் எதிரான பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அதற்குத் திருத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இணையத்தளம், அதன் ஃபேஸ்புக் பக்கம், டுவிட்டர் பக்கம் ஆகியவற்றில், "கா. சண்முகம் சிங்கப்பூரின் சட்ட, உள்துறை அமைச்சர் பதவியிலிருந்து தாம் விலகக்கூடும் என்று கூறுகிறார்," எனும் தலைப்பிலான கட்டுரை வெளியானது.
அது வாசகர்களை ஈர்க்கும் நோக்கில் வேண்டுமென்றே திரித்துக் கூறப்பட்ட வாசகம் என்று அமைச்சர் சண்முகம் நேற்று கூறினார்.
நேற்று முன்தினம் வெளியான கட்டுரையை ஹாங்காங்கைச் சேர்ந்த ஹெட்லேண்ட் இண்டெலிஜன்ஸ் வர்த்தகப் புலனாய்வு நிறுவனத்தின் தலைமை ஆய்வாளர் டோ ஹான் ஷி எழுதியுள்ளார்.
இம்மாதத் தொடக்கத்தில் 'வணக்கம் மலேசியா' எனும் தமிழ் செய்தித்தளத்திற்குத் திரு சண்முகம் அளித்த நேர்காணலை அந்தக் கட்டுரை மேற்கோள்காட்டியது.
அதில் தாம் பதவி விலகவிருப்பதை அமைச்சர் வெளியிட்டதாகவும் இருப்பினும் அதற்கான தேதி எதையும் அவர் குறிப்பிடவில்லை என்றும் கட்டுரை கூறியது.
சென்ற செவ்வாய்க்கிழமை அந்த நேர்காணல் இடம்பெற்ற காணொளிக்கான இணைய முகவரியைத் திரு சண்முகம் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.
அமைச்சர் சண்முகம் அந்தக் காணொளியில் தாம் பதவி விலகக்கூடும் என்றோ அதுகுறித்துச் சிந்திப்பதாகவோ குறிப்பிடவில்லை என்று சட்ட அமைச்சு தெரிவித்தது.
மக்களுக்குச் சேவை ஆற்றுவதை தமக்குக் கிடைத்த சிறப்புஉரிமையாகக் கருதுவதாக அதில் அவர் குறிப்பிட்டுள்ளார். எல்லாருக்கும் இத்தகைய வாய்ப்பு கிடைக்காது என்றும் தமக்கு மக்கள் ஆதரவு இல்லை என்ற சூழல் வந்தால் விலகிக்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும் என்றும் திரு சண்முகம் காணொளியில் கூறியிருந்தார்.
தமக்கு பதிலாகத் திறமையான தலைவர்கள் அரசியல் களத்திற்கு வரும்போது அடுத்த கட்டத்துக்குச் செல்லத் தாம் தயாராக இருக்கவேண்டும் என்றும் நேர்காணலில் அவர் சொல்லியிருந்தார்.
மேலும், தமது சொல், செயல் இரண்டிலும் எப்போதும் வெளிப்படைத்தன்மையைக் கட்டிக்காப்பதாகக் கூறிய திரு சண்முகம், அவ்வாறு செய்ய இயலாவிட்டால் அமைச்சர் பதவியிலிருந்து விலகிக்கொள்வதாகவும் கூறியிருந்தார்.
அந்த நேர்காணலில் இருந்து அமைச்சர் தாம் பதவி விலகக்கூடும் என்று சொன்னதாகத் திரித்துக் கூறுவது தவறு என்று சட்ட அமைச்சு குறிப்பிட்டது.
தமது கருத்துகள் பொதுவானவை, அமைச்சர் பதவியை வகிக்கும் அனைவருக்கும் பொருந்தக்கூடியவை என்று திரு சண்முகம் அந்தக் காணொளியில் வலியுறுத்தி இருப்பதையும் அமைச்சு சுட்டியது.
கட்டுரையின் தலைப்பில் மட்டுமின்றி செய்தியின் முதல் பத்தியிலும் தகவலைத் திரித்து எழுதியிருப்பதாக அது குறிப்பிட்டது.
இதனையடுத்து, பொஃப்மா சட்டத்தின்கீழ் 'தி இண்டிபெண்டண்ட் சிங்கப்பூர்' இணையத்தளம், கட்டுரையாளர் டோ ஆகிய தரப்புகளுக்கு அமைச்சர் சண்முகம் திருத்த உத்தரவு பிறப்பித்துள்ளார்.
டோ தனது கட்டுரையை டுவிட்டரிலும் பதிவிட்டுள்ளார்.
இணையத்தளமும் டோவும் தங்கள் பதிவுகளுக்கு அருகில் திருத்தக் குறிப்பையும், இதன் தொடர்பில் தெளிவுபடுத்திக்கொள்ள அரசாங்கத்தின் 'ஃபேக்சுவலி' இணையப்பக்கத்திற்கான தொடர்பு முகவரியையும் பதிவிட வேண்டியது கட்டாயம்.
நேர்காணலில், "எப்போதாவது உங்களுக்கு நீங்களே உண்மையாய் இருப்பதை அரசியல் தடுப்பதாய் நீங்கள் நினைத்ததுண்டா? அதுகுறித்து நீங்கள் வருத்தப்பட்டதுண்டா?" என்று அமைச்சர் சண்முகத்திடம் கேட்கப்பட்டதாய் 'ஃபேக்சுவலி' குறிப்பிட்டது.
தமது பதிலில் சிங்கப்பூருக்குச் சேவையாற்றும் விருப்பத்தை அவர் மறுவுறுதிப்படுத்தியதாகவும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

