சீன நாட்டு அதிகாரியைப் போல் நடித்த மோசடிக்காரர்கள் 75 வயது மாதின் மத்திய சேமநிதிக் கணக்கில் இருந்து ஒரு மில்லியன் வெள்ளியை எடுத்தது தெரியவந்துள்ளது.
சிங்கப்பூரிலும் வெளிநாடுகளிலும் உள்ள வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு அந்தத் தொகை மாற்றப்பட்டதும் கண்டறியப்பட்டது.
'டீம்லிங்க்' எனும் இணையக் காணொளிக் கலந்துரையாடல் தளத்தின் மூலம் மோசடிக்காரர்கள் அன்றாடம் மூன்று முறை அவரைத் தொடர்புகொண்டனர்.
மூதாட்டியின் கணவர் வீட்டில் இல்லாத நேரங்களில் பேசிய அவர்கள் பின்னர் ஒரு கைத்தொலைபேசியையும் அவருக்கு அனுப்பி வைத்தனர்.
சீனாவில் கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றிய மோசடியில் மூதாட்டியின் பெயர் அடிபடுவதாகக் கூறிய மோசடிக்காரர்கள், குடும்ப உறுப்பினர்களை இதில் தொடர்புபடுத்த வேண்டாம் என்று எச்சரித்ததாகக் காவல்துறையிடம் நேற்று அவர் தெரிவித்தார்.
மோசடிக்காரர்கள் ஒரு மில்லியன் வெள்ளியில் ஒரு பகுதியை மூதாட்டியின் யுஓபி வங்கிக் கணக்குக்கும் மாற்றியதால், வங்கி இந்தப் பரிவர்த்தனை குறித்து காவல்துறைக்குத் தகவல் அளித்தது. இதனையடுத்துக் காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டது.

