கிராஞ்சி வனப்பகுதியில் தவறுதலாகக் கூடுதலான இடம் அழிக்கப்பட்டது சென்ற ஆண்டு கண்டறியப்பட்டது. இதன் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட மூவரில் ஜூரோங் நகராண்மைக் கழக அதிகாரிகள் இருவரும் அடங்குவர்.
நிறுவனத்தின் அப்போதைய துணை இயக்குநரான சோங் புய் சி மீது பூங்காக்கள், மரங்கள் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் ஏழு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
நிறுவனத்தின் அப்போதைய மூத்த திட்ட மேலாளரான நியோ ஜெக் லின் மீது அதே சட்டத்தின்கீழ் எட்டு குற்றச்சாட்டுகளும் வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் ஒரு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டன.
மூன்றாவதாக, சிபிஜி கன்சல்டண்ட்ஸ் நிறுவன ஊழியரான டான் சி சீ மீது பூங்காக்கள், மரங்கள் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
இதில் தொடர்புடைய அவரது சக ஊழியர் ஜிம்மி லியு விங் டிம் மருத்துவ விடுப்பில் இருப்பதால் மற்றொரு நாள் அவர்மீது நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்படும்.
வேளாண்-உணவுப் புத்தாக்கப் பூங்காவிற்காக அழிக்கப்பட்ட வனப்பகுதி குறித்து இயற்கை ஆர்வலர்களும் இணையவாசிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மே 23ஆம் தேதி வரை இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.