கள்ளப்பணத்தை ஒழிக்க உதவும் உலக அமைப்பு கூடியது
நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில், நிதி செயல்திட்டப் பணிக்குழு அமைப்பின் அமைச்சர்நிலை கூட்டத்தில் கலந்துகொண்டார்.
உலகளவில் கள்ளப்பணம் புழங்குவதையும் பயங்கரவாதிகளுக்குக் பணம் போய் சேர்வதையும் கண்காணிக்கும் அமைப்பாக இந்தச் செயல்திட்டப் பணிக்குழு திகழ்கிறது.
நிதி அமைச்சர் ஏப்ரல் 16 முதல் ஏப்ரல் 25ஆம் தேதி வரை அமெரிக்க பயணம் மேற்கொண்டு இருக்கிறார். அமெரிக்காவில் இந்தப் பணிக்குழுவின் தலைவர் டாக்டர் மார்கஸ் பிளேயர், கனடா துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான கிறிஸ்டியா ஃபிரிலாண்ட், பிரிட்டனின் நிதி அமைச்சர் ரிஷி சுனக் உள்ளிட்ட தலைவர்களையும் தான் சந்தித்ததாக ஃபேஸ்புக்கில் திரு வோங் குறிப்பிட்டார்.
திரு டி. ராஜகுமார், உள்துறை அமைச்சில் 2015 முதல் மூத்த ஆலோசகராக (அனைத்துலக) பணியாற்றி இருக்கிறார். அவர், அந்த அமைச்சர்நிலை கூட்டத்தில் கலந்துகொள்ளும் சிங்கப்பூர் குழுவிற்குத் தலைமை ஏற்றுள்ளார்.
திரு ராஜகுமாருடன் நிதி அமைச்சர் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டார். திரு ராஜ குமார் அந்தப் பணிக்குழுவின் தலைவராக ஜூலை 1ஆம் தேதி முதல் இரண்டாண்டு காலம் பணியாற்ற இருக்கிறார்.
அந்தப் பணிக்குழுவின் ஓர் உறுப்பினராக 1992 முதல் சிங்கப்பூர் இருந்து வருகிறது.
முதன் முதலாக அந்தக் குழுவிற்கு சிங்கப்பூர் இப்போது தலைமை ஏற்கிறது. அந்தப் பணிக்குழு உறுப்பினர்களுடன் சேர்ந்து சிங்கப்பூர் தொடர்ந்து பணியாற்றும் என்று திரு வோங் கூறினார்.
கள்ளப்பணத்தைத் தடுக்கவும் பயங்கரவாதிகளின் கைகளுக்குப் பணம் போய் சேர்வதைத் தடுத்து நிறுத்தவும் உலகளவில் இடம்பெறும் போராட்டத்தில் தனது பங்கை சிங்கப்பூர் தொடர்ந்து ஆற்றும் என்றும் திரு வோங் குறிப்பிட்டு இருக்கிறார்.

