சிராங்கூன் சாலையில் போதைப் பொருள் வைத்திருந்த நான்கு முதியவர்கள் கைது செய்யப்பட்டனர்

சிராங்கூன் சாலையில் போதைப் பொருள் வைத்திருந்த நான்கு முதியவர்கள் கைது செய்யப்பட்டனர்

1 mins read
ca82501d-bdac-486c-8715-f4db35e2edc1
உணவுப் பொட்டலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைமிகு அபினை மத்திய போதைப் பொருள் ஒழிப்பு அதிகாரிகள் கைப்பற்றினர். படம்: மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு -

போதைப் பொருள் நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகத்தின்பேரில் நான்கு முதியவர்கள் சிராங்கூன் சாலை வட்டாரத்தில் கைதுசெய்யப்பட்டனர்.

மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு ஞாயிற்றுகிழமை (ஏப்ரல் 24) அன்று இதைக் கூறியது.

கைது செய்யப்பட்டவர்கள் 61 வயதுக்கும் 67 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

அவர்களில் மூவர் ஆண்கள். ஒருவர் பெண் ஆவார்.

அதனுடன் சுமார் 735 கிராம் போதைமிக அபின், 254 கிராம் ஐஸ் ஆகியவை நடவடிக்கையின்போது பறிமுதல் செய்யப்பட்டன.

அவற்றின் சந்தை மதிப்பு ஏறத்தாழ 90,000 வெள்ளி என்று மத்திய போதைப்பொருள் பிரிவு கூறியது.

வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 22) பிற்பகலில் சிராங்கூன் சாலையில் 61 வயது சிங்கப்பூர் ஆடவரை மத்திய போதைப் பொருள் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

அவரிடமிருந்து 245 கிராம் ஐஸ் போதைப் பொருளையும் 3,400 வெள்ளி ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனர்.

அதை ஒட்டிய நடவடிக்கையில், 65 வயது பெண், 65 மற்றும் 67 வயதுள்ள இரண்டு ஆண்கள் ஆகியோர் சிராங்கூன் ரோட்டில் கைதுசெய்யப்பட்டனர்.

அவர்கள் அனைவரும் சிங்கப்பூரர்கள்.

விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.

பதினைந்து கிராம் போதைமிகு அபின், அல்லது 250 கிராம் ஐஸ் போதைப் பொருளைக் கடத்தியதாக குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.