கொவிட்-19 தொடக்க சிரமங்களை விவரித்த மருத்துவர்கள்
2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சீனாவின் வூஹானில் பரவத் தொடங்கிய புதிய வகைக் கிருமி நோயாளிகளைக் கையாள மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் குறித்து மருத்துவ நிபுணர்கள் விளக்கி உள்ளனர். கொவிட்-19 தொற்று காலத்தில் பட்ட அனுபவங்களையும் அதன் தொடர்பான எண்ணங்களையும் சிங்கப்பூர் பொது மருத்துவமனையின் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் புதிதாக வெளியிடப்பட்ட புத்தகம் ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளனர். இந்தப் புத்தகத்தை
பிரதமர் லீ சியன் லூங் நேற்று மாலை வெளியிட்டார்.
சிங்கப்பூர் பொது மருத்துவமனை அவசரப் பிரிவின் தலைவராக அப்போது இருந்த இணைப் பேராசிரியர்
கென்னத் டான், "சீனாவிலிருந்து புதிய வகைக் கிருமியுடன் ஏராளமானோர் எங்களிடம் வருவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை," என்றார். நிலைமை படிப்படியாக மோசமானதாகவும் அதனைச் சமாளிக்கப் பணியாளர்கள் திணறியதாகவும் அவர் அந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். மருத்துவப் பணியின் புதிய தலைமுறையினர், மூத்த மருத்துவர்களைப்போல அர்ப்பணிப்புடனும் துணிச்சலுடனும் நடந்துகொண்டதாக மற்றொரு இணைப் பேராசிரியர் புவா கீ சீ கூறினார்.
இவ்வாண்டு பதிவான புதிய கார்களில் 5ல் 1 வாடகை கார்
இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களில் பதிவு செய்யப்பட்ட கார்களில் ஐந்தில் ஒன்று தனியார் வாடகை கார். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் வாடகை கார்களாகப் பயன்படுத்த பதிவு செய்யப்பட்ட புதிய கார்களின் எண்ணிக்கையைக்காட்டிலும் இது 12 விழுக்காடு அதிகம். தனியார் பயன்பாட்டுக்கான வாடகை கார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை இது காட்டுகிறது. கார் பகிர்வு சேவைஅல்லது புதிய கார் வாங்குவதற்குப் பதிலாக நீண்டகாலக் குத்தகைக்கான வாடகை கார் ஆகியவற்றுக்கு இவை பயன்படுத்தப்படக்கூடும். இத்தகைய கார்களின் எண்ணிக்கை 2017 ஆம் ஆண்டு முதல் 2021 வரை 9.3 விழுக்காடு உயர்ந்து 23,147 ஆனதாக நிலப் போக்குவரத்து ஆணையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
துன்புறுத்தலைத் தடுத்து உதவ
புதிய குழந்தை பாதுகாப்பு நிலையம்
குழந்தைப் பாதுகாப்பு சிறப்பு நிலையம் ஒன்று சுவா சூ
காங் வட்டாரத்தில் அடுத்த மாதம் திறக்கப்பட உள்ளது. வீட்டில் துன்புறுத்தலையும் புறக்கணிப்பையும் எதிர்நோக்கும் குடும்பங்களுக்கும் குழந்தைகளுக்கும் உதவும் நோக்கில் இந்நிலையம் உருவாகிறது. ஃபெய் யுவ் சமூக சேவை அமைப்பு இதற்கு ஏற்பாடு செய்துள்ளது. சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு பரிந்துரைக்கும் சட்டப் பாதுகாப்புக் கான அவசியம் ஏற்படாத குழந்தை பாதுகாப்பு சம்பவங்களை இந்நிலையம் கையாளும். உதாரணமாக, நிதிச்சுமையில் இருக்கும் பெற்றோர் தங்களது குழந்தைகளிடம் கடுமையாக நடந்துகொள்ளலாம்; அல்லது அவர்களைச் சரிவரப் பராமரிக் காமல் இருக்கலாம். இதுபோன்ற சம்பவங்களில் உதவ புதிய நிலையம் முன்வரும்.

