மாதங்கி இளங்கோவன்
கேளிக்கைக்கூடங்கள் ஈராண்டுகளுக்குப் பிறகு செவ்வாய்க்
கிழமை (ஏப்ரல் 19) அன்று மீண்டும் திறக்கும் செய்தி மக்களிடையே எதிர்பார்ப்பை வரவழைத்திருந்தாலும் மறுநாள் அக்கூடங்களில் கூட்டம் நிரம்பவில்லை.
புதன்கிழமை வேலைநாள் என்பதும் ஒரு காரணம்.
ஏஆர்டி பரிசோதனைக்கான ஏற்பாடுகள் ஒரு சில கேளிக்கைக் கூடங்களுக்கு வெளியே இன்னும் செய்யப்படாததாலும் மக்கள் இக்கூடங்களுக்குச் செல்லும் திட்டத்தைத் தள்ளிப்போட்டனர். ஆனால், சில கேளிக்கைக் கூடங்களில் வெள்ளிக்கிழமை நிலைமை மாறியது.
'கிளப் ரூமர்ஸ்' கேளிக்கைக் கூடத்துக்கு இரவு 11 மணி முதல் அதிகாலை 3 மணிவரை வாடிக்கையாளர்கள் தங்கள் நண்பர்களோடு திரளாக வந்ததை தமிழ் முரசு கண்டது.
உள்ளே நுழையும் முன்பு ஏஆர்டி பரிசோதனையைச் செய்ய ஒரு குறிப்பிட்ட இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.
இரு ஊழியர்களின் மேற்பார்வையில் அந்தப் பரிசோதனையைச் செய்து 15 நிமிடங்கள் காத்திருந்த பின்பு, அவர்களுக்கு கொவிட்-19 தொற்று உண்டா இல்லையா என்று உறுதிசெய்யப்பட்டது.
மது அருந்தும்போது மட்டும் முகக்கவசத்தைக் கழற்றலாம் என்றும் நடன மேடையில் ஆடும்போது அதனை அணிந்திருக்க வேண்டும் என்றும் 'கிளப் ரூமர்ஸ்' இயக்குநர் மகேஸ்வரி ஜெகநாதன் கூடத்தின் வாசலிலேயே வாடிக்கையாளர்களிடம் அறிவித்தார்.
நிகழ்ச்சி பெரிதும் ஈர்த்தாலும் நடனமாடும்போது முகக்கவசம் அணிய வேண்டிய கட்டாயம் பலரை தங்கள் மேசைகளின் அருகிலேயே இருக்க வைத்தது.
ஈராண்டுகளாக டிஜே வேலையில் ஈடுபடாத காரணத்தால் வெள்ளிக்கிழமையன்று பாடல்களை தேர்ந்தெடுக்கவேண்டியபோது சில சமயங்களில் எந்தப் பாடலைப் போடுவது என தடுமாறியதாகக் கூறினார், ஜீவன் சந்திரன், 32.
கூடிய விரைவில் இக்கூடங்களில் கூட்டம் அதிகமாகும் என்று எதிர்பார்த்தாலும், ஏஆர்டி பரிசோதனைக்கு அதிக கட்டணம் செலுத்தவேண்டிய காரணத்தால் சிலர் வரத் தயங்குவர் என்றார் அவர்.

