கடந்த ஏழு ஆண்டுகளாக பரதநாட்டியம் பயின்று வரும் வெற்றிவேலனுக்குச் சிறு வயதிலிருந்தே நடனத்தின் மீது ஈடுபாடு.
"நான் 1990களில் வளர்ந்தவன். அப்போது, ஆண் பரதக் கலைஞர்களைப் பார்ப்பது மிக அரிது. ஆண்கள் நடனம் கற்றுக்கொள்ளக்கூடாது என்ற மனப்பான்மையும் அந்தக் காலகட்டத்தில் மிகப் பரவலாக இருந்தது," என்று 31 வயது வெற்றிவேலன் குணசேகரன் குறிப்பிட்டார்.
தொடக்கப்பள்ளி இந்திய நடனக்குழுவில் நடனம் பற்றிக் கற்றுக்கொண்டார் வெற்றிவேலன். பலதுறைத் தொழிற்கல்லூரியில் 'சல்சா' எனும் லத்தீன் நடனம் பயின்றார்.
சல்சா நிகழ்ச்சி ஒன்றில் வெற்றிவேலன் ஆடியதைப் பார்த்த அவரின் குடும்பத்தினர், அவரது திறமையை அறிந்துகொண்டனர். அதே சமயம், ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி இந்திய நடனக்குழுவின் ஆசிரியராகப் பணியாற்றிய திருமதி கவிதா கிருஷ்ணன் இவருக்கு அறிமுகமானார்.
இதனால், வெற்றிவேலன் அப்சரா ஆசியாவின் இளையர் திறன் திட்டத்தில் கலந்துகொண்டார். அங்கு அவருக்கு வெவ்வேறு நடனக்கலைகளை அறிந்துகொள்ளும் அரிய வாய்ப்புக் கிடைத்தது. 2015ஆம் ஆண்டில் தேசிய சேவையை முடித்தபின் 'டெம்பிள் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ்' பள்ளியில் வெற்றிவேலன் பரதத்தை முறையாக கற்றுக்கொள்ள ஆரம்பித்தார்.
"ஒரு கலை என்பதற்கும் மேலானது நடனம். ஒழுக்கம், மன உறுதி ஆகியவற்றை அது கற்றுக்கொடுக்கிறது. ஓர் அபிநயத்தைச் செய்யும்போது, ஆணாக இருந்தாலும் காட்சியில் இடம்பெறும் கதாபாத்திரம், எப்படி யோசிப்பார் என்பதைக் கருத்தில்கொள்ள வேண்டும்," என்றார் வெற்றிவேலன். பரதநாட்டியத்தைக் கற்றுத் தேற, உழைப்புடன் குருவின் ஆதரவும் ஆசீர்வாதமும் முக்கியம் என்கிறார் இவர்.

