தன்னால் ஆடவே இயலாது என்று எண்ணியிருந்த கார்த்திகையன், தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி நாள்களில் நடன நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்கவில்லை. இந்நிலை பலதுறை தொழிற்கல்லூரிக்கு அவர் சென்றபின் மாறியது.
ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியின் இந்திய கலாசார மன்றத்தில் கார்த்திகையன் சேர்ந்தார். மன்றத்தின் ஏற்பாட்டில் ஒவ்வொரு வாரமும் திருமதி கவிதா கிருஷ்ணன் நடனப் பயிற்சி அளித்தார். கார்த்திகையன் அப்பயிற்சிகளில் பரதநாட்டியத்தின் அழகை ரசிக்கத் தொடங்கினார்.
திருமதி கவிதா கிருஷ்ணனின் அப்சரா ஆசியா நிறுவனத்தின் இளையர் திறமைகள் திட்டத்தில் கார்த்திகையன் இணைந்தார். பரதக்கலையின் மீது இவருக்கு இருந்த ஈடுபாட்டைக் கவனித்த திருமதி கிருஷ்ணன், முறைப்படி பரதநாட்டியத்தைக் கற்றுக்கொள்ள இவரை ஊக்குவித்தார். அப்சரா ஆசியா இருந்த அதே கட்டடத்தில் திரு வி. பாலகிருஷ்ணன் பரதம் சொல்லிக்கொடுத்ததால், கார்த்திகையன் அங்கு பரதம் பயிலத் தொடங்கினார்.
"அப்போது நான் படித்துக்கொண்டிருந்ததால் என்னால் வகுப்புகளுக்கான கட்டணத்தைச் செலுத்த முடியவில்லை. இருப்பினும், குரு வி.பாலகிருஷ்ணன் வகுப்புகளுக்கு வரும்படி என்னை அழைத்தார். இதனால்தான் என்னால் தொடர்ந்து பரதம் கற்றுக்கொள்ள முடிந்தது," என்றார் கார்த்திகையன். திரு வி. பாலகிருஷ்ணனிடமிருந்து சில ஆண்டுகள் பரதத்தைக் கற்றுக்கொண்டபின் 'ஓம்கார் ஆர்ட்ஸ்' நிறுவனத்தில் 2015ஆம் ஆண்டில் சேர்ந்தார் கார்த்திகையன். 2018ஆம் ஆண்டில் தனது பரதநாட்டிய அரங்கேற்றத்தை முடித்தார்.
தற்போது அவர் அதே நிறுவனத்தில் பரதநாட்டியத்தைக் கற்றுக்கொடுக்கும் ஆசிரியராகவும் கற்றுக்கொள்ளும் மாணவராகவும் உள்ளார். தொடக்கப்பள்ளியில் படிக்கும்போதே தன் பெற்றோர் மணவிலக்கு செய்துகொண்டதால், கார்த்திகையன் அவர் அக்காவின் அரவணைப்பில் வளர்ந்தார். நடனம் இவருக்கு ஆறுதல் அளித்தது. தன்னுடன் பரதம் கற்கும் சக மாணவர்களும் தன்னுடைய ஆசிரியர்களும் தனக்கு வாய்த்த இரண்டாவது குடும்பம் என்றார்.
"ஆண்கள் பரதநாட்டியம் ஆடுவதை முன்பெல்லாம் அதிகம் பார்க்க முடியாது. இதனால்தான் ஆண்களுக்கும் பரதக்கலைக்கும் தொடர்பு இல்லை என்ற மனப்பான்மை தோன்றியது," என்றார் 33 வயது கார்த்திகையன்.
"ஆனால், இப்போது அந்த மனப்பான்மை மாறிவருகிறது. இணையம், மேடை நிகழ்ச்சிகள் போன்றவற்றின் வழி ஆண்கள் பரதநாட்டியம் ஆடுவதை மக்கள் அதிகம் பார்க்கிறார்கள், ரசிக்கிறார்கள்," என்றார் அவர்.

