சிங்கப்பூர் ஹோட்டலில் மாண்டுகிடந்த முன்னணி பிலிப்பீன்ஸ் பெண் வர்த்தகர்

சிங்கப்பூர் ஹோட்டலில் மாண்டுகிடந்த முன்னணி பிலிப்பீன்ஸ் பெண் வர்த்தகர்

1 mins read
144233b9-c472-4deb-ab6b-a7599677896c
திருவாட்டி கிறிஸ் ஆல்பர்ட் பிலிப்பீன்ஸ் சமூகத்தில் நன்கு அறியப்பட்டவர். படம்: ஃபிலா பிலிப்பீன்ஸ்/ஃபேஸ்புக் -

பிலிப்பீன்சைச் சேர்ந்த பிரபலமான பெண் வர்த்தகர் தி ஃபுல்லர்ட்டன் பே ஹோட்டலில் கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 23) அதிகாலையில் மாண்டு கிடந்தார்.

அந்தப் பெண் கிறிஸ் ஆல்பர்ட் என்று அழைக்கப்பட்ட திருவாட்டி மார்சிகிறிஸ் அபாட் சாண்டோஸ் ஆல்பர்ட், 52, ஆவார்.

அவர் ஃபிலா (Fila) பிலிப்பீன்ஸ் நிறுவனத்தின் தலைவராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றினார்.

சென்ற 2007ஆம் ஆண்டு அவர் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.

கடந்த சனிக்கிழமை பின்னிரவு 1.05 மணிக்கு அந்த சம்பவம் பற்றி தங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

திருவாட்டி ஆல்பர்ட் சம்பவ இடத்தில் பேச்சு மூச்சில்லாமல் கிடக்கக் காணப்பட்டார்.

மருத்துவ உதவியாளர் பரிசோதித்து அவர் சம்பவ இடத்தில் மாண்டுவிட்டதாகத் தெரிவித்தார்.

இயற்கைக்கு மாறான மரணம் என்று காவல்துறையினர் அதை வகைப்படுத்தியுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று திருவாட்டி ஆல்பர்ட் தி தி ஃபுல்லர்ட்டன் பே ஹோட்டலில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

திருவாட்டி ஆல்பர்ட்டின் மரணத்தை ஃபிலா பிலிப்பீன்ஸ் நிறுவனம் திங்கள் (ஏப்ரல் 25) அன்று உறுதிப்படுத்தியது.

விளையாட்டு அணிகலன்கள் விற்கும் ஃபிலா, பல்வேறு நாடுகளில் நிறுவனங்களை வைத்திருக்கிறது.