கொவிட்-19 கிருமிப் பரவலை சகித்துக்கொண்டு வாழும் நிலை நெருங்கும் வேளையில் வீட்டிலிருந்து வேலை பார்ப்பது, வேலையிடத்தில் வேலை செய்வது இரண்டும் சேர்ந்தே கடைப்பிடிக்கப்படவுள்ளன.
அதைத் தொடர்ந்து நிறுவனங்கள் தங்களின் கண்ணோட்டத்தையும் இயங்கும் முறையையும் மாற்றிக்கொள்ளவேண்டும் என்று வலியறுத்தப்படுகிறது.
ஊழியர்கள் மீண்டும் வேலையிடத்திற்குச் செல்லும்போது கொவிட்-19 தொடர்பிலான அச்சங்கள், பாதுகாப்பு தூர இடைவெளி தொடர்பிலான நடவடிக்கைகள் ஆகியவற்றைக் கருத்தில்கொள்ளவேண்டும் என்றும் கொள்கை ஆய்வுக் கழகம் வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.
வேலையிடங்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஊழியர்களுக்குக் கூடுதல் கட்டுப்பாடுகள் இருப்பதைப் பொதுவாக மக்கள் வரவேற்கின்றனர் என்பது கருத்தாய்வில் தெரியவந்துள்ளது.
சென்ற ஆண்டு டிசம்பர் மாத இறுதியிலிருந்து இவ்வாண்டு தொடக்கம் வரை சிங்கப்பூரில் அதிகமான கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாயின. அந்த காலகட்டத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஊழியர்களுக்குக் கடுமையான விதிமுறைகள் இருக்கவேண்டும் என்ற கருத்து கூடுதலானோரிடையே நிலவியது.
கருத்தாய்வில் பங்கேற்ற பலர், வேலையிடப் பாதுகாப்பு விதிமுறைகளின்படி அடிக்கடி கொவிட்-19 பரிசோதனைகளை மேற்கொள்ள விரும்பவில்லை என்று தெரிவித்தனர். வேலையிடங்களில் முகக்கவசம் அணியாமல் இருப்பதையும் பலர் வரவேற்றனர்.
மேலும், கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டு மீண்டும் பள்ளிக்கோ வேலையிடத்துக்கோ செல்ல மருத்துவ விடுப்பு போன்ற ஆவணங்கள் தேவையில்லை என்ற விதிமுறையை 64 விழுக்காட்டு பங்கேற்பாளர்கள் வரவேற்றனர்.

