சரியான மருத்துவச் சலுகைகள் வழங்கப்பட்டால் தாங்கள் சிறிய, நடுத்தர நிறுவனங்களில் சேர்ந்து அவற்றில் தொடர்ந்து பணியாற்றத் தயாராய் இருப்பதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், பல சிறிய, நடுத்தர நிறுவனங்கள் போதுமான மருத்துவச் சலுகைகளை வழங்க சிரமப்படுகின்றன. அவை சிறிய நிறுவனங்களாக இயங்குவதும் குழுக் காப்புறுதித் திட்டங்களுக்கு அதிகம் செலவாவதும் அதற்கான காரணங்கள்.
மருத்துவமனை உள்நோயாளிச் செலவு, பொது மருந்தக வெளிநோயாளிச் செலவு ஆகிய இரண்டும் மருத்துவச் சலுகைகளில் அடங்கும். காப்புறுதி நிறுவனமான 'புருடென்ஷியல் சிங்கப்பூர்', வர்த்தக ஆய்வு நிறுவனமான 'மிலியூ இன்சைட்' ஆகியவை இணைந்து நடத்திய கருத்தாய்வில் இந்த விவரங்கள் தெரியவந்தன.
சிங்கப்பூரைச் சேர்ந்த 1,029 சிறிய நடுத்தர நிறுவன ஊழியர்களையும் வர்த்தக உரிமையாளர்களையும் கொண்டு கருத்தாய்வு நடத்தப்பட்டது. அவர்களில் 10ல் ஒன்பது பேர் தங்கள் நிறுவனங்கள் சுகாதாரப் பராமரிப்புக் காப்புறுதித் திட்டங்களை வழங்குவதை விரும்புகின்றனர்.

