சிங்கப்பூரில் இன்று முதல் கொவிட்-19 கட்டுப்பாடுகள் பெரிய அளவில் தளர்த்தப்படுகின்றன. மேலும், ஈராண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக 'டோர்ஸ்கோன்' எனப்படும் கிருமித்தொற்று எச்சரிக்கை குறியீட்டின் நிறம் இன்று முதல் ஆரஞ்சிலிருந்து மஞ்சளுக்குக் குறைக்கப்படுகிறது.
இன்று முதல் தளர்த்தப்படும் கட்டுப்பாடுகளில் சில:
வரம்பின்றி ஒன்றுகூடலாம்,
பாதுகாப்பு இடைவெளி இல்லை
இன்று முதல் முகக்கவசம் அணியத் தேவையில்லாத நடவடிக்கைளை மேற்கொள்ளும்போதும் வரம்பின்றி எத்தனை பேருடன் வேண்டுமானாலும் ஒன்றுகூடலாம். வீட்டிற்கு வரும் விருந்தினர்களின் எண்ணிக்கைக்கும் வரம்பு கிடையாது. திருமணங்கள், இறுதிச் சடங்குகள் போன்றவற்றுக்கும் இது பொருந்தும். மேலும், உள்ளரங்குகளிலும் வெளிப்புறங்களிலும் பாதுகாப்பு இடைவெளியைக் கடைப்பிடிக்கத் தேவையில்லை.
எல்லா ஊழியர்களும் வேலைஇடங்களுக்குத் திரும்பலாம், சில வேளைகளில் முகக்கவசம் தேவையில்லை
இதுவரை வீட்டிலிருந்து வேலை பார்த்த அனைவரும் மீண்டும் வேலையிடங்களுக்குச் செல்லலாம்.
வேலையிடங்களில் பிறருடன் தொடர்புகொள்ளாதபோது முகக்கவசம் அணியத் தேவையில்லை. எனினும், வாடிக்கையாளர்களுடன் தொடர்புகொள்ளும் பணியில் இருப்போருக்கு இது பொருந்தாது.
1,000 பேருக்கும் அதிகமானோர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கு வரம்பு இல்லை
1,000 பேருக்கும் அதிகமானோர் இடம்பெறக்கூடிய பெரிய நிகழ்ச்சிகளில் இனி வரம்பின்றி பங்கேற்பாளர்கள் கலந்துகொள்ளலாம்.
முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகளுக்கு கொவிட்-19 பரிசோதனை தேவையில்லை
நிலம், கடல், ஆகாயம் ஆகியவற்றின் வாயிலாக சிங்கப்பூருக்கு வரும் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் இனி பயணம் மேற்கொள்வதற்கு முன்னர் கொவிட்-19 பரிசோதனையை மேற்கொள்ளத் தேவையில்லை.
பல இடங்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோருக்கு மாறுபட்ட விதிமுறைகள் இல்லை
திருமணங்கள், கலந்துரையாடல்கள், மாநாடுகள் போன்ற 500க்கும் அதிகமானோர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளைத் தவிர மற்ற இடங்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோருக்கான மாறுபட்ட விதிமுறைகள் விலக்கப்பட்டுள்ளன. அதனால் பெரும்பாலான இடங்களில் 'டிரேஸ்டுகெதர்' கருவியைக் கொண்டு 'சேஃப்என்ட்ரி' பதிவுசெய்யத் தேவையில்லை.
உணவு, பானக் கடைகளிலும் தடுப்பூசி போட்டுக்கோதோருக்கு மாறுபட்ட விதிமுறைகள் உள்ளன. ஆனால் அவற்றுக்குச் செல்ல 'சேஃப்என்ட்ரி' பதிவுசெய்யத் தேவையில்லை.
சுகாதார அபாய குறிப்பு இல்லை
கிருமித்தொற்றுக்கு ஆளானோருடன் நெருங்கிய தொடர்பு உள்ளவர்களுக்கு சுகாதார அமைச்சு இனி 'ஹெச்ஆர்என்' எனும் சுகாதார அபாயக் குறிப்பை வழங்காது.
கூடுதல் வெளிநாட்டு ஊழியர்கள் சமூகத்திற்கு வரலாம்
இனி வார நாள்களில் அதிகபட்சமாக 25,000 வெளிநாட்டு ஊழியர்கள் சமூகத்திற்குள் வரலாம்.வார இறுதி நாள்களிலும் பொது விடுமுறை நாள்களிலும் இந்த எண்ணிக்கை 50,000க்கு உயர்த்தப்பட்டுள்ளது.
கட்டுப்பாடு தளர்வுகள் குறித்து பொதுமக்கள் சிலர் தமிழ் முரசிடம் கருத்து தெரிவித்தனர்.
"கொவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதால் என்னால் என் நண்பர்களை இனி ஒன்றாக சந்தித்து பேசமுடியும். முன்பெல்லாம் ஐந்து பேர், 10 பேர் என்ற கட்டுப்பாடு இருந்ததால் அனைவரும் ஒன்றாக சந்தித்து பேசி மகிழ முடியவில்லை. இப்போது நான் அனைவரையும் பார்த்து மகிழலாம்," என்று சென்ற ஆண்டு தொடக்கக் கல்லூரி படிப்பை முடித்த 18 வயது அக்ஷயா அய்யாகண்ணு கூறினார்.
"நாம் இந்தத் தளர்வுகளை மனமுவந்து வரவேற்கிறோம். இருந்தாலும் பாதுகாப்புடனும் விழிப்புடனும் இருத்தல் அவசியம். ஒன்றுபட்டு இணைந்து பாதுகாப்பான சமூகத்தைப் பேணுவோம்," என்று ஆசிரியராகப் பணியாற்றும் 36 வயது கலைவாணி இளங்கோ சொன்னார்.
கூடுதல் செய்தி:
ஹர்ஷிதா பாலாஜி

