நினைவிழப்பு நோயால் ஆசியர்
களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து ஆய்வு நடத்த நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (என்டியு) புதிய நிலையம் ஒன்றைத் திறந்துள்ளது.
ஆசியர்களுக்கு நினைவிழப்பு நோய் ஏற்படுவதற்கு முன்பு அவர்
களது மூளையில் ஏற்படும் மாற்றத்தை ஆய்வு செய்ய புதிய நிலையம் பயன்படுத்தப்படும்.
ஒருவருக்கு நினைவிழப்பு நோய் ஏற்படும் அபாயம் உள்ளதா என்பதை முன்கூட்டியே தெரிந்துகொள்ளவும் நோய் ஏற்படுவதைத் தாமதிக்கவும் தேவைப்படும் உத்தி களைக் கண்டுபிடிப்பதே நிலையத்தின் இலக்கு.
எனவே, நினைவிழப்புக்கான அறிகுறிகள் உள்ளவர்களை ஆய்வு செய்யத் திட்டமிட்டுள்ளது.
சிங்கப்பூர் நினைவிழப்பு ஆய்வு நிலையம் என்று பெயரிடப்பட்டுள்ள புதிய நிலையத்தின் திறப்பு விழாவின் சிறப்பு விருந்தினராக சிங்கப்பூரின் மருத்துவச் சேவைகள் இயக்குநர் கென்னத் மாக் கலந்துகொண்டார். சிங்கப்பூரில் 60 வயதும் அதற்கும் மேற்பட்டவர்களில் பத்தில் ஒருவருக்கு நினைவிழப்பு நோய் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நினைவிழப்பு நோயை எதிர்கொள்வதில் சுகாதார அமைச்சு பல்முனை அணுகு முறையைக் கடைப்பிடிப்பதாக இணைப் பேராசிரியர் மாக் கூறினார். நினைவிழப்பு நோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது, சமூகத்திலும் மருத்துவ
மனைகளிலும் பராமரிப்பு ஆற்றலை மேம்படுத்துவது, நினைவிழப்பு நோயாளிகளுடன் வசித்து அவர்
களைப் பராமரிப்பவர்களுக்கு
ஆதரவு வழங்குவது ஆகியவை அதில் அடங்கும்.
"நினைவிழப்பு நோயின் அறி
குறிகளை ஆரம்பகட்டத்திலேயே அடையாளம் காணாவிட்டால் பிறகு உதவ முடியாமல் போய்விடும். நினைவிழப்பு நோயை எதிர்கொள்ள மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு இதுவே கடுமையான சவாலாக உள்ளது.
"மூளையில் உள்ள உயிரணுக்களை இழந்துவிட்டால் அதை மீண்டும் மீட்கவோ உயிர்ப்பிக்கவோ முடியாது," என்று புதிய நிலையத்தின் இயக்குநரான இணைப் பேராசிரியர் நாகேந்திரன் கந்தையா தெரிவித்தார். நினைவிழப்பு நோய் ஏற்படுவதற்கு முன்பு ஒருவருக்கு 30 வயதிலேயே மூளையில் சில மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்றார் அவர்.

