செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
9bfd3c03-6508-45fa-8c0a-85b8b042e4a6
-

பணம் கையாடிய முன்னாள் வங்கி ஊழியருக்கு 26 வார சிறை

பணத்தைக் கையாடிய குற்றத்துக்காக ஓசிபிசி வங்கியின் முன்னாள் ஊழியருக்கு 26 வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சூதாட்டத்துக்கு அப்பணத்தைப் பயன்படுத்த 26 வயது ஸெக்கரியா வோக் ஆன் யி அவ்வாறு செய்தார். தாம் செய்த இந்தக் குற்றத்தை மறைக்க தமது தந்தை மற்றும் நண்பரைப் போல கையெழுத்திட்டு அவர்களது வங்கிக் கணக்குகளிலிருந்து பணம் எடுத்து, கையாடிய பணத்துக்குப் பதிலாக அதை வங்கியில் உள்ள பெட்டிக்குள் வைத்தார்.

நம்பிக்கை துரோகம், பணம் கையாடிய குற்றம் ஆகியவற்றுக்காக வோங்கிற்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

வங்கியிலிருந்து பணம் எடுத்திருப்பதாக 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28ஆம் தேதியன்று சக ஊழியரிடம் வோங் தெரிவித்தார். நிலைமையைச் சரிசெய்ய அவரிடம் வோங் $3,800 கடன் கேட்டார். கடன் கொடுக்க மறுத்துவிட்ட சக ஊழியர், தமது மேற்பார்வையாளரிடம் இதுகுறித்து தெரிவித்தார்.

வோங் மொத்தம் $9,989 கையாடியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

உறவுக்காரரின் டிரேஸ்டுகெதரை பயன்படுத்தியவருக்கு அபராதம்

மருத்துவ விடுப்பில் இருந்தபோது யாருக்கும் தெரியாமல் வெளியே போகும் நோக்குடன் தமது 12 வயது உறவுக்காரப் பெண்ணுக்குச் சொந்தமான டிரேஸ்டுகெதர் கருவியைப் பயன்படுத்திய சுகாதாரப் பராமரிப்பு ஊழியருக்கு $10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

உணவு வாங்கவும் நூலகத்திலிருந்து புத்தகங்களை இரவல் பெறவும் பொது இடங்களுக்குள் செல்ல 34 வயது பிரிசில்லா டான் சியூ சின் இவ்வாறு செய்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அப்போது டானுக்கு கொவிட்-19 கிருமித்தொற்று இல்லை.

டான் டோக் செங் மருத்துவமனையின் நரம்பியல் நிலையத்தில் நோயாளிச் சேவை ஊழியராக டான் பணியாற்றுகிறார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 30ஆம் தேதியன்று அங்கு பணிபுரிந்த மருத்துவர் ஒருவருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டது. அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த டானுக்கு வேலையிலிருந்து விடுப்பு வழங்கப்பட்டது.

வேலை விடுப்பில் இருந்த டானுக்கு உணவு போன்ற அத்தியாவசியப் பொருள்கள் வாங்க வெளியே செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

இருப்பினும், கிருமித்தொற்று ஏற்படும் பட்சத்தில் வெளியே சென்றால் பிரச்சினை ஏற்படும் என்று பயந்த டான், தமது கொவிட்-19 பரிசோதனை முடிவுகள் இன்னமும் வெளிவராத நிலையில் தமது உறவினரின் டிரேஸ்டுகெதர் கருவியைப் பயன்படுத்தினார்.

சட்டவிரோத சூதாட்டத்தில் ஈடுபட்டவருக்குச் சிறை

சட்டவிரோத சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றத்துக்காக 72 வயது சீட் சியாவ் குவாங்கிற்கு நான்கு வார சிறைத் தண்டனையும் $30,000 அபராதமும் விதிக்கப்பட்டன.

அவரது மூன்று சகோதரர்களும் சட்டவிரோத கும்பல் ஒன்றின் தலைவர்கள் என்று கூறப்படுகிறது.

2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் தேதியன்று புளோக் 48A தங்ளின் ஹால்ட் சாலையில் உள்ள ஈரச்சந்தையில் சீட் இருந்ததைச் சில காவல்துறை அதிகாரிகள் கண்டனர். சீட்டிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள் பிறகு அவரை அலெக்சாண்டிரா அக்கம்பக்க போலிஸ் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர்.

மே 9ல் நாடாளுமன்றக் கூட்டம்

நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டம் மே மாதம் 9ஆம் தேதி திங்கட்கிழமை பிற்பகல் 1.30 மணிக்குத் தொடங்கும் என்று நாடாளுமன்ற அலுவலர் நேற்று தெரிவித்தார்.