பிலிப்பீன்சைச் சேர்ந்த பிரபல வர்த்தகரான 52 வயது திருவாட்டி மரிகிறிஸ் அபாத் சாந்தோஸ் ஆல்பர்ட் கடந்த சனிக்கிழமை காலை சிங்கப்பூரில் உள்ள தி ஃபுல்லர்ட்டன் பே ஹோட்டலில் மாண்டு கிடக்கக் காணப்பட்டார்.
ஃபிலா பிலிப்பீன்ஸ் எனும் விளையாட்டுத் துறை சம்பந்தப்பட்ட ஆடைகளை விற்பனை செய்யும் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான திருவாட்டி ஆல்பர்ட் இரண்டு பிள்ளைகளுக்குத் தாய்.
80 கோலியர் கீயை காவல்துறை அதிகாரிகளும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகளும் அடைந்தபோது திருவாட்டி ஆல்பர்ட் அங்கு சுயநினைவின்றி கிடந்தார்.
சம்பவ இடத்திலேயே அவர் மாண்டுவிட்டதாக மருத்துவ உதவியாளர் தெரிவித்தார்.
திருவாட்டி ஆல்பர்ட்டின் மரணத்தை இயற்கைக்கு மாறான மரணம் என்று காவல்துறையினர் வகைப்படுத்தி உள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை தி புல்லர்ட்டன் பே ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொள்ள திருவாட்டி ஆல்பர்ட் சிங்கப்பூர் வந்திருந்ததாக அறியப்படுகிறது.
திருவாட்டி ஆல்பர்ட்டின் மரணம் பிலிப்பீன்ஸ் மக்களிடையே அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.

