பாலியல், குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள், தற்கொலை எண்ணமுள்ளவர்கள் ஆகியோரைப் பாதுகாக்க கூடுதல் நடவடிக்கை எடுக்கப்படும் என சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் குறிப்பிட்டுள்ளார். சிங்கப்பூர்க் காவல் துறை வேலை திட்ட கருத்தரங்கில் அமைச்சர் அவ்வாறு கூறினார்.
பாலியல் குற்றங்கள் அதிகரித்துவருவதாகவும், குடும்ப வன்செயல் சம்பவங்களைச் சமாளிக்க காவல் துறை கூடுதல் நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் சொன்னார்.
2020ஆம் ஆண்டு சமுதாய, குடும்ப மேம்பாடு அமைச்சு 1,490 குடும்ப வன்முறை சம்பவங்களை விசாரித்தது. 2019ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கை 1,310.
இத்தகைய சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் உதவ, மூன்று திட்டங்களை அமைச்சர் முன்வைத்தார். அவை பங்காளித்துவம், பயிற்சி, தளவாடங்களை மறுசீரைமைப்பது ஆகும்.
தற்கொலை எண்ணமுள்ளவர்களுக்கு ஆறுதலும் ஆதரவும் அளிக்க மார்ச் 2021ஆம் ஆண்டிலிருந்து காவல் துறை மனநலக் கழகத்துடன் பணியாற்றிவருகிறது.
பாலியல், குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணவும், அவர்கள் உணர்வுகள் பாதிக்காத விதத்தில் நடந்துகொள்ளவும் காவல் துறை அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கப்படும்.
அடுத்தாண்டு போலிஸ் கென்டான்மன்ட் வளாகத்தில் 'ஒன்சேஃப்' எனும் நிலையம் திறக்கப்படவுள்ளது. பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களிடம் தனிப்பட்ட அறையில் மருத்துவ பரிசோதனையும், விசாரணையும் நடக்கும். அவர்கள் ஓய்வெடுக்க அறைகளும் இருக்கும்.

