செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
c654384d-b277-4304-ad7b-5b2905143dc5
-

'அவேர்' அமைப்பின் புதிய தலைவராக செய்தியாளர் நியமனம்

மகளிர் உரிமை, பாலின சமத்துவ அமைப்பான அவேர் அமைப்பு புதிய இயக்குநர் சபையைத் தேர்ந்தெடுத்துள்ளது. மூத்த செய்தியாளர் ஓங் சோ சின் அதன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவேர் அமைப்பின் வருடாந்திர பொதுக் கூட்டம் கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்றது. கொவிட்-19 நெருக்கடிநிலை காரணமாக அமைப்பின் பொதுக்கூட்டம் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக ஸூம் தளம் மூலம் நடத்தப்பட்டது. முதல்முறையாக அவேர் அமைப்பின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திருவாட்டி ஓங்கை யாரும் எதிர்த்துப் போட்டியிடவில்லை.

இதற்கு முன்பு 2018ஆம் ஆண்டிலிருந்து 2022ஆம் ஆண்டு வரை திருவாட்டி மார்கரெட் தாமஸ் அப்பதவியை வகித்தார். அமைப்பின் பொருளாளராக திருவாட்டி ஆராத்தி ஆறுமுகம் தொடர்கிறார். அவரையும் எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை.

இதற்கிடையே, உதவிப் பொருளாளர் பதவிக்காக இருவர் போட்டியிட்டனர். இயக்குநர் சபையில் மொத்தம் ஆறு பேர் உறுப்பினராகலாம். அதற்குப் பத்து பேர் போட்டியிட்டனர்.

மே 7ல் இஸ்தானா

பொது வரவேற்பு தினம்

அடுத்த மாதம் 7ஆம் தேதியன்று பொதுமக்களுக்காக இஸ்தானா திறந்துவிடப்படுகிறது. பொது வரவேற்பு தினங்களில் இஸ்தானாவுக்குச் செல்ல விரும்புவோர் இனி நுழைவுச்சீட்டுகளுக்காக விண்ணப்பிக்கத் தேவையில்லை.

அனைத்து வருகையாளர்களுக்கும் இஸ்தானா வளாகம் காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை திறக்கப்பட்டிருக்கும் என்று அதிபர் மாளிகை நேற்று தெரிவித்தது.

இம்முறை தொழிலாளர் தினம், நோன்புப் பெருநாள் ஆகியவற்றை முன்னிட்டு இஸ்தானாவில் பொது வரவேற்பு தினம் நடத்தப்படுகிறது.

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொவிட்-19 நெருக்கடிநிலை தொடங்கியது. அதற்குப் பிறகு அடுத்த மாதம் 7ஆம் தேதியன்று இஸ்தானா முதல்முறையாகப் பொதுமக்களுக்குத் திறந்துவிடப்படுகிறது. இஸ்தானா வளாகத்துக்குள் நுழைய பொதுமக்கள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. ஆனால் பிரதான கட்டடத்துக்குள் நுழைய விரும்புவோர் இஸ்தானாவிலேயே நுழைவுச்சீட்டுகளை வாங்கலாம்.

நான்கு வயதும் அதற்கும் மேற்பட்ட சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தரவாசிகளுக்கான நுழைவுச்சீட்டின் விலை $2. வெளிநாடுகளைச் சேர்ந்த நான்கு வயதுக்கும் 12 வயதுக்கும் இடைப்பட்ட சிறுவர்களும் $2 செலுத்தவேண்டும். ஏனைய வெளிநாட்டினர் $4 செலுத்த வேண்டும்.

மருத்துவமனை நோயாளிகளை நேரில் சென்று பார்க்கலாம்

மருத்துவமனைகளிலும் பராமரிப்பு இல்லங்களிலும் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளை நேரில் சென்று பார்க்க நேற்று முதல் அனைவருக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கும் போட்டுக்கொள்ளாதவர்களுக்கும் இது பொருந்தும்.

நோயாளிகளைக் காண மருத்துவமனைகளுக்கும் பராமரிப்பு இல்லங்களுக்கும் செல்பவர்களுக்கான பாதுகாப்பு விதிமுறைகளிலும் மாற்றங்கள் கொண்டுவரப்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.

ஹஜ் யாத்திரை: சிங்கப்பூர் முஸ்லிம்களுக்கு 407 இடங்கள்

உள்ளூர் முஸ்லிம்கள் இவ்வாண்டு ஹஜ் யாத்திரையில் ஈடுபடலாம். சிங்கப்பூர் முஸ்லிம்களுக்காக 407 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அனைத்துலக அளவில் மொத்தம் 850,000 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஹஜ் யாத்திரைக்கு சிங்கப்பூரின் அதிகாரபூர்வ இடஒதுக்கீடு 900 இடங்களாகும். இவ்வாண்டு ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் அதைவிட 50 விழுக்காட்டுக்கும் குறைவு என்று சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் நேற்று தெரிவித்தது.

நோன்புப் பெருநாள் தொழுகை: பள்ளிவாசல்களில் கூடுதல் இடம்

நோன்புப் பெருநாள் காலையில் பள்ளிவாசல்களில் நடைபெறும் தொழுகையில் 206,000க்கும் மேற்பட்டோர் ஈடுபடலாம் என்று சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் அறிவித்துள்ளது. இதற்கு முன்பு 153,000 இடங்கள் மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அடுத்த மாதம் 3ஆம் தேதி நோன்புப் பெருநாள் காலையில் 66 பள்ளிவாசல்களில் தொழுகை குறைந்தது இரண்டு பிரிவுகளாக நடத்தப்படும். 15 பள்ளிவாசல்களில் கூடுதலானோர் தொழுகைக்கு வருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பள்ளிவாசல்களில் தொழுகை மூன்று பிரிவுகளாக நடத்தப்படும்.