சிறு நிறுவனங்கள் தங்களது திறன் பயிற்சித் தேவைகளைத் தெரிவிப்பதில் உதவ புத்தாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவ்வாறு செய்வதன் மூலம் பயிற்சி நிறுவனங்கள் விரைந்து செயல்பட இயலும் என்றும் கல்வி அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்து உள்ளார்.
இவ்வாறு செய்வதன் மூலம் வர்த்தக சபைகளும் நிபுணத்துவ அமைப்புகளும் பயிற்சி மேம்பாட்டில் பெரிய பங்கை வகிக்க முடியும் என்றும் அவர் நேற்று கூறினார்.
அதிகம் தேவைப்படும் திறன்களை அடையாளம் காணவும் திறன் அடிப்படையிலான வாழ்க்கைத் தொழில் பாணியை உருவாக்கவும் இதுபோன்ற அமைப்புகளுடன் 'ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர்' பங்காளித்துவம் செய்துகொள்ள திட்டம் கொண்டுள்ளதாக திரு சான் தெரிவித்தார்.
தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம், சிங்கப்பூர் கணினிச் சங்கம் மற்றும் சிங்கப்பூர் தொழில்நுட்பத் துறைக்கான வர்த்தகச் சங்கம் (எஸ்ஜிடெக்) ஆகியவற்றுக்கு இடையில் இணைப்பு ஏற்பட்டதும் பங்காளித்துவ முயற்சிகள் தொடங்கும் என்றார் அவர்.
பொருளியல் ரீதியாக போட்டித்தன்மையுடன் விளங்கவும் மீள்திறன் ஊழியரணியைக் கட்டிக்காக்கவும் சிங்கப்பூரின் திறன் பயிற்சி முறை மேம்பாடு காண மேற்கொள்ளப்படும் நான்கு அம்சங்களில் இதுவும் ஒன்று என்றும் வேலையிட கற்றல் மாநாட்டில் பங்கேற்று பேசியபோது திரு சான் குறிப்பிட்டார்.
பெரியவர்களின் கற்றல் திறன் வளர்ச்சி, தொழில்கூடங்களுக்கும் உயர் கல்வி நிலையங்களுக்கும் இடையிலான பங்காளித்துவம், சிங்கப்பூரின் திறன் வளத்தை உருவாக்குவதில் நிறுவனங்களின் அணுகுமுறை ஆகியன இதர மூன்று அம்சங்கள் என்றார் அவர்.
இங்கு முதல்முறை அரங்கேறிய இந்த மாநாட்டுக்கு சிங்கப்பூரின் 5 பலதுறைத் தொழில் கல்லூரிகள், தொல்நுட்பக் கல்விக் கழகம், பெரியோர் கற்றல் நிலையம், சிங்கப்பூர் தொழில் நுட்பக் கழகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
பாய லேபாரில் உள்ள வாழ்நாள் கற்றல் நிலையத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டுக்கு ஸ்கில்ஸ்பியூச்சர் சிங்கப்பூர் அமைப்பு ஆதரவு அளித்தது.

