உட்லண்ட்சில் உள்ள ஜங்ஷன் 10 கடைத்தொகுதியில் உள்ள மின்தூக்கியில் சிக்கிக் கொண்ட மூன்று பேரை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் மடை அதிகாரிகள் காப்பாற்றியுள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 26) மாலை 5.10 மணி அளவில் உதவி கேட்டு அழைப்பு வந்ததாக குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
எண் 1 உட்லண்ட்ஸ் ரோட்டில் இருக்கும் அந்த கடைத்தொகுதியின் இரண்டாம், நான்காம் மாடிகளுக்கு இடையில் மின்தூக்கி நின்றுவிட்டது. அந்த மின்தூக்கி மூன்றாவது மாடிக்குச் செல்வதில்லை.
அந்த மின்தூக்கிக்கு மீண்டும் மின்சார இணைப்பு வழங்க முடியாததால் பேரிடர் உதவி, மீட்புக் குழுவின் அதிகாரிகள் அழைக்கப்பட்டனர்.
நான்காவது மாடியில் உருளைகளில் கயிறுகள் கட்டப்பட்டன.
அதைக் கொண்டு இரண்டு மீட்பு அதிகாரிகள் கீழ் இறங்கி, மின்தூக்கி மேலே இருந்த வாயிலின்வழி உள்ளே நுழைந்தனர்.
பின்னர் மின்தூக்கியில் சிக்கி இருந்தவர்கள் ஏணி வழியாக மின்தூக்கியை விட்டு வெளியேற்றப்பட்டு, மின்கலன்கொண்டு இயங்கும் சிறப்புச் சாதனத்தின் மூலம் மேலே கொண்டுவரப்பட்டனர்.
மூன்று பேரும் காயங்களுக்காக பரிசோதிக்கப்பட்டதாகவும் அவர்கள் மருத்துவமனை சிகிச்சை பற விரும்பவில்லை என்றும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.