வளர்ச்சி தொடர்பிலான சிறப்புத் தேவைகள் உள்ள பிள்ளைகளைக் கவனித்துக்கொள்ளும் பராமரிப்பாளர்களுக்குக் கூடுதல் மனநல ஆதரவு வழங்கப்படவுள்ளது. கேகே மகளிர், சிறார் மருத்துவமனை, 'லியென்' அறநிறுவனம் ஆகியவற்றின் புதிய திட்டத்தின்கீழ் இது சாத்தியமாகிறது.
இந்த ஈராண்டுத் திட்டத்திற்கு 'டேஒன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. ஒரு பிள்ளைக்கு சிறப்புத் தேவை உள்ளது என்ற செய்தி தெரிவிக்கப்படும்போது உருவாகும் சவாலான சூழலை மையமாகக் கொண்டு இவ்வாறு பெயரிடப்பட்டுள்ளது.
மனநல விவகாரங்களில் சிங்கப்பூர் கூடுதல் கவனம் செலுத்திவரும் வேளையில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பெற்றோர், பிள்ளைகள் ஆகியோரின் சுகாதாரத்திலும் அதிக அக்கறை காட்டப்பட்டு வருகிறது.
திட்டத்தின்கீழ் முதலில் அடுத்த மாதத்திலிருந்து கேகே மருத்துவமனையின் பிள்ளை வளர்ச்சிப் பிரிவுக்கு சிறுவர்களை அழைத்துவரும் 500 பராமரிப்பாளர்கள் சோதிக்கப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கோல், செங்காங், ஹாவ்காங் ஆகிய வட்டாரங்களில் வசிக்கும் குடும்பங்கள் மீது அதிக கவனம் செலுத்தப்படும்.
அப்பகுதிகளில் அதிகமான இளம் குடும்பங்கள் வசிப்பது இதற்குக் காரணம். சுமார் 100 பராமரிப்பாளர்களுக்கு உதவி தேவைப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்காக ஈராண்டுகளுக்கு 3.6 மில்லியன் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையில் கிட்டத்தட்ட 75 விழுக்காட்டை 'லியென்' அறநிறுவனம் வழங்கும். எஞ்சிய தொகையை கேகே மருத்துவமனை வழங்கும்.
மருத்துவ சமூக சேவை ஊழியர்கள், மனநல ஆலோசகர்கள், மனநல மருத்துவர்கள், சிறுவர் மருத்துவர்கள், தாதியர் உள்ளிட்டோரைக் கொண்ட 15 நிபுணர்களைக் கொண்ட பலதுறைக் குழுவை கேகே மருத்துவமனை அமைக்கும். பராமரிப்பாளர்களுக்குக் கூடுதல் கவனம் செலுத்தும் வகையில் அதன் சேவைகளும் நடைமுறைகளும் மாற்றியமைக்கப்படும்.
2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்வரை நீடிக்கவுள்ள இந்தத் திட்டத்தில் சமூகப் பங்காளிகள் ஈடுபடுத்தப்படுவர். திட்டம் நல்ல பலன்களை அளித்தால் வருங்காலத்தில் இதை விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
சிறப்புத் தேவையுடைய பிள்ளைகளைக் கவனித்துக்கொள்வோருக்கு உதவி

