தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பெருவிரைவு ரயில் பாதையில் நேற்று காலை ஏற்பட்ட ரயில் கோளாற்றால் கிட்டத்தட்ட 50 பயணிகள் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக ரயிலில் சிக்கிக்கொண்டனர். உட்லண்ட்ஸ், உட்லண்ட்ஸ் நார்த் பெருவிரைவு ரயில் நிலையங்களுக்கு நடுவே ரயில் கோளாறு ஏற்பட்டதாக 'எஸ்எம்ஆர்டி' நிறுவனம் நேற்று காலை ஒன்பது மணியளவில் ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தது.
நேற்று காலை சுமார் 8.10 மணிக்கு பயணிகளால் உட்லண்ட்ஸ் நிலையத்தில் ரயிலிலிருந்து வெளியேற முடிந்தது. கோளாற்றால் நின்றுபோன ரயிலில் விளக்குகள் சரியாகச் செயல்பட்டதாகவும் அதில் காற்றோட்டமாக இருந்ததாகவும் 'எஸ்எம்ஆர்டி' கூறியது.
கோளாற்றைச் சரிசெய்ய தனது பொறியாளர்கள் உடனே பணியில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் 'எஸ்எம்ஆர்டி' சொன்னது. இச்சம்பவத்தால் உட்லண்ட்ஸ் நார்த், கேல்டிகாட் நிலையங்களுக்கு இடையே ஓடும் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.
ரயில் சமிக்ஞை கோளாற்றால் அவற்றுக்கு இடையே இரண்டு திசைகளிலும் ஓடும் ரயில்கள் மெதுவாக இயங்கியதாக 'எஸ்எம்ஆர்டி' முன்னதாக நேற்று காலை 7.31 மணிக்கு டுவிட்டரில் தெரிவித்திருந்தது. அதற்குப் பிறகு சம்பவத்திற்குக் காரணம் ரயிலில் ஏற்பட்ட கோளாறு என்பதை அந்நிறுவனம் குறிப்பிட்டது.
நிலைமையைக் கையாள இரு ரயில் நிலையங்களுக்கும் இடையே பயணிகளுக்கு இலவசப் பேருந்து இணைப்புச் சேவைகள் வழங்கப்பட்டன.
நேற்று காலை 8.45 மணிக்கு பயணிகளால் உட்லண்ட்ஸ் நார்த் ரயில் நிலையத்திற்குள் போகமுடியவில்லை. அங்கிருக்கும் ரயில் நுழைவாயில்கள் மூடப்பட்டிருந்தன.
கேல்டிகாட் நிலையத்திற்கு இலவசப் பேருந்துச் சேவைகளைப் பயன்படுத்துமாறு பயணிகளிடம் தெரியப்படுத்த நிலையத்தில் குறிப்பு வைக்கப்பட்டிருந்தது. அவர்களின் பயண நேரம் 25 நிமிடங்கள் அதிகரிக்கும் என்றும் அது குறிப்பிட்டது.
பொதுவாக உட்லண்ட்ஸ் நிலையத்திலிருந்து உட்லண்ட்ஸ் நார்த் நிலையத்திற்குச் செல்ல இரண்டு நிமிடங்கள் ஆகும். நேற்று காலையிலோ 30 நிமிடங்கள் ஆனதாகப் பயணிகள் சிலர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினர்.
ரயில் சேவைகள் படிப்படியாக இயல்புநிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்ததாக காலை 9.01 மணிக்கு 'எஸ்எம்ஆர்டி' டுவிட்டரில் தெரிவித்தது. சேவைகள் மீண்டும் தொடங்கியதாக 9.09 மணிக்குக் குறிப்பிட்டது. காலை 9.10 மணிக்கு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் உட்லண்ட்ஸ் நிலையத்திற்குச் சென்றபோது அங்கு ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கியிருந்தன

