இரண்டு உணவுப் பொருள்களைத் தவிர்க்குமாறு எச்சரிக்கை
உடல் எடையைக் குறைப்பதற்கும் ஆண்கள் பாலியல் உறவில் ஈடுபட உதவுவதற்கும் உகந்தவை எனச் சொல்லப்படும் இரண்டு உணவுப் பொருள்களை உட்கொள்ளவேண்டாம் என்று பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 'ஏகே 2 ஃபினோமெனல் கிங்', 'பிரீமியம் புரோ ஃபிளேஷ்' ஆகியவை மோசமான உடல் ரீதியான பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையத்தில் விற்கப்படும் இவ்விரு உணவுப் பொருள்களை வாங்கவேண்டாம் என்று எச்சரிக்கும் ஆலோசனைக் குறிப்பை சுகாதார அறிவியல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் முயற்சியை வரவேற்கும் சிங்கப்பூர்
ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் நிரந்தர உறுப்பினர்களான ஐந்து நாடுகள் இனித் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தால் அது குறித்து விவாதிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு சிங்கப்பூர் ஆதரவளிக்கிறது. நேற்று முன்தினம் இது குறித்து முடிவெடுக்கப்பட்டது. 83 நாடுகள் இதற்கு ஆதரவு தெரிவித்தன. சிங்கப்பூரும் அவற்றில் ஒன்று.
இதன்படி ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகளில் ஒன்று எதிர்ப்பு தெரிவித்தால் 10 வேலை நாள்களுக்கும் நிறுவனத்தின் பொதுச் சபை கூட்டப் படவேண்டும். அமைதி, தற்காப்பு போன்ற விவகாரங்களுக்கு ஐக்கிய நாட்டு நிறுவன உறுப்பு நாடுகள் தங்களின் கருத்துகளை முன்வைப்பது போன்றவற்றுக்கு இந்த முயற்சி வகைசெய்யும் என்று வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ரஷ்யா ஆகியவை எதிர்ப்புத் தெரிவிக்கும் அதிகாரம் உள்ள ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் நிரந்தர உறுப்பு நாடுகள்.
சிங்கப்பூர்-மலேசிய தரைவழி எல்லைகள் கூட்டமாக இருக்கலாம்
வரும் நீண்ட வார இறுதியில் காஸ்வே கடற்பாலம், துவாஸ் இரண்டாம் இணைப்பு ஆகியவற்றில் கூட்ட நெரிசல் ஏற்படலாம். அந்த காலகட்டத்தில் மலேசியாவிற்குத் தரைவழிப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிடுவோர் இதற்குத் தயாராய் இருக்கவேண்டும் என்று குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் தெரிவித்துள்ளது.
மே தினம், நோன்புப் பெருநாள் ஆகிய இரண்டு விடுமுறை நாள்களும் அடுத்தடுத்து வருவதால் முன்னதாக இருந்ததைவிடவும் அதிகமானோர் மலேசியாவுக்குப் பயணம் மேற்கொள்வர் என்று ஆணையம் குறிப்பிட்டது.
அண்மையில் புனித வெள்ளிக்கிழமை வார இறுதியில் 436,800 பயணிகள் தரைவழி எல்லைகள் வாயிலாகப் பயணம் மேற்கொண்டனர். இந்த வாரத்தின் எண்ணிக்கை அதையும் மிஞ்சிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

