மறுசுழற்சி நடவடிக்கைகள் பசுமையான சுற்றுச்சூழலை ஏற்படுத்தும் யோசனைகளைக் கொண்டுள்ளோர் 'எஸ்ஜி எக்கோ ஃபண்ட்' எனப்படும் சுற்றுச்சூழல் நிதியத்தின் உதவியை நாடலாம்.
$50 மில்லியன் மானிய உதவி வழங்குவதற்கான நிதியத்தை 2020 நவம்பர் மாதம் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுச்சூழல் அமைச்சு ஏற்படுத்தியது. நீடித்த நிலைத்தன்மைக்கான தீர்வுகளுக்கு இணைந்து பங்களிப்போரை ஆதரிக்க இது உருவாக்கப்பட்டது.
இரு வகையான நிதி உதவிக்கு இவ்வாண்டு விண்ணப்பிக்கலாம். முதன்மை வகைக்கான நிதி உதவிக்கு வரும் மே 1ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 'ஸ்ப்ரவுட்' என்று பெயரிடப்பட்டு உள்ள இரண்டாம் வகை நிதி ஆதரவு கோரி இவ்வாண்டு முழுவதும் விண்ணப்பிக்கலாம்.
$10,000 தொடங்கி $1 மில்லியன் வரையிலான பசுமைத் திட்டங்களுக்குரியது முதன்மை வகை. அதேபோல $10,000 வரையிலான நிதி தேவைக்குரிய வகை 'ஸ்ப்ரவுட்', என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
"இந்த மாற்றங்கள் தனிப்பட்டோரும் அமைப்புகளும் பசுமைத் திட்டங்களை முன்கூட்டியே தீட்டுவதற்குக் கைகொடுப்பதோடு அவர்களின் யோசனைகள் செயல்வடிவம் பெறவும் உதவும்," என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுச்சூழல் அமைச்சர் கிரேஸ் ஃபூ கூறியுள்ளார்.
உள்ளூர் சமூக நிறுவனமான 'சிட்டி ஸ்ப்ரவுட்ஸ்' நடத்தும் நீடித்த நிலைத்தன்மை நிலையத்தின் தொடக்க நிகழ்வில் பங்கேற்று அவர் பேசினார். இந்நிறுவனம் 2021ஆம் ஆண்டின் முற்பகுதியில் மானியம் பெற்றிருந்தது.
"பசுமையான, குறைந்த கரிம வெளியேற்றத்துடனான வருங்
காலத்தை நோக்கி நடைபோடும் நமது வாழ்க்கை, வேலை மற்றும் பொழுதுபோக்கில் மாற்றங்கள் தேவைப்படுகின்றன. இந்த உருமாற்றம் எல்லாவற்றையும் உள்ளடக்கியதாக இருக்கும்.
"மேலும் இந்த மாற்றங்கள் நிகழ நாம் புதியதொரு சமூக ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும். பசுமை உருமாற்றத்துக்கான பணியில் தனிப்பட்டோருடன் குடும்பம், அமைப்பு, வர்த்தகம் ஆகியனவும் தங்களது பங்கை ஆற்றலாம்," என்றார் திருவாட்டி ஃபூ.
2030 சிங்கப்பூர் பசுமைப் பெருந் திட்டத்தை ஆதரிக்கும் 'எஸ் எக்கோ ஃபண்ட்' இதுவரை 105 தனிப்பட்டோருக்கு $6.6 மில்லியன் மானியத்தை வழங்கி உள்ளது. மானியம் கோரி விண்ணப்பிப்போர் இங்கு வசிக்கும் குடிமக்களாகவோ நிரந்தரவாசியாகவோ இருப்பது அவசியம்.

