ஜங்ஷன் 10 கடைத்தொகுதியில் உள்ள மின்தூக்கி பழுதடைந்ததால் அதிலிருந்து வெளியே வர முடியாமல் மூவர் சிக்கித் தவித்தனர்.
அவர்களை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் பத்திரமாக மீட்டனர்.
இந்தச் சம்பவம் நேற்று நிகழ்ந்தது.
எண் 1, உட்லண்ட்ஸ் சாலையில் அமைந்துள்ள அந்தக் கடைத்
தொகுதியின் இரண்டாம் மாடிக்கும் நான்காவது மாடிக்கும் இடையே மின்தூக்கி பழுதடைந்து முடங்கியது. அக்கடைத்தொகுதியில் மூன்றாவது மாடியில் மின்தூக்கிச் சேவை கிடையாது.
காலை 5.10 மணி அளவில் இதுகுறித்து தகவல் கிடைத்ததாகக் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
மின்தூக்கியில் மீண்டும் மின்சாரத்தைக் கொண்டு இயக்க முடியாத நிலை ஏற்பட்டதால் கப்பி மற்றும் கயிற்றைப் பயன்படுத்தி இரண்டு அதிகாரிகள் மேல் மாடியிலிருந்து இறங்கி மின்தூக்கியை அடைந்தனர்.
சிக்கியவர்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற மீட்புப் பணியின்போது அவர்களுக்குப் பாதுகாப்புச்
சாதனம் அணிவிக்கப்பட்டது. பிறகு ஏணியைப் பயன்படுத்தி அவர்கள் காப்பாற்றப்பட்டனர்.
மின்கலன் மூலம் இயங்கும் இயந்திரம் ஒன்றைப் பயன்படுத்தி அவர்கள் மேல் மாடிக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
அவர்களுக்குக் காயம் ஏற்பட்டுள்ளதாக என்று கண்டறிய பரிசோதனை நடத்தப்பட்டது. மருத்துவமனைக்குச் செல்ல அந்த மூவரும் மறுத்துவிட்டதாக குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.