செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
7ba92ffe-7f67-4b44-b8ea-1acce0744bff
-

தூங்கி விபத்து ஏற்படுத்திய காவல்துறை அதிகாரிக்குச் சிறை

காவல்துறை காரை ஓட்டிக்கொண்டிருந்துபோது தூக்கத்தில் ஆழ்ந்ததால் விபத்து ஏற்படுத்திய காவல்துறை அதிகாரிக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அந்த விபத்தில் இரண்டு பாதசாரிகள் காயமடைந்தனர். அவர்கள் இருவரும் முறையாக சாலையைக் கடந்துகொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. அவர்களுக்கு எலும்பு முறிவுகள் ஏற்பட்டன.

இந்த விபத்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதியன்று மாலை 6.20 மணி அளவில் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் ஹால் 11க்கு அருகில் நன்யாங் அவென்யூவில் நிகழ்ந்தது.

31 வயது நூரிமாவாத்தி அப்துல்லாவுக்கு (படம்) மூன்று மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் அனைத்து வகை வாகனங்களை ஓட்ட அவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர் சிறையிலிருந்து விடுதலையாகும் தேதியிலிருந்து இந்தத் தடைக்காலம் தொடங்கும்.

நூரிமாவாத்தி பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.

$50,000க்கும் அதிகமான லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு

லஞ்சம் வாங்கியதாக முன்னாள் சுர்பானா ஊழியரான

59 வயது சியோவ் கூன் தோங் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பல்வேறு ஒப்பந்ததாரர்களிடமிருந்து அவர் மொத்தம் $50,500 லஞ்சம் வாங்கியதாக நம்பப்படுகிறது.

2017ஆம் ஆண்டு செங்காங்கில் தொடங்கிய தேவைக்கேற்ப கட்டப்படும் குடியிருப்புத் திட்டமான ரிவர்வேல் ஷோர்சை மதிப்பீடு செய்யும்போது எவ்வித குறைபாடுகளையும் சுட்டிக்காட்டாமல் இருக்க சியாவுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

சியாவ் மீது தற்போது ஒன்பது ஊழல் குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன. 2018ஆம் ஆண்டிலிருந்து கடந்த ஆண்டு வரை சியால் லஞ்சம் வாங்கியதாகக் கூறப்படுகிறது.

ஏழு நிறுவனங்களின் இயக்குநர்களிடமிருந்தும் ஒரு நிறுவனத்தின் ஊழியரிடமிருந்தும் சியாவ் லஞ்சம் வாங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.

வாகனக் காப்புறுதித் திட்ட மோசடி: ஐவர் மீது குற்றச்சாட்டு

வாகனக் காப்புறுதித் திட்ட மோசடியில் ஈடுபட்டதாக ஐந்து பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குற்றச்சாட்டை எதிர்நோக்கும் ஆடவர்கள் 24 வயதுக்கும் 31 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

தங்கள் வாகனம் சேதமடைந்ததாகவும் தங்களுக்குக் காயம் ஏற்பட்டதாகவும் பொய்த் தகவல்களை அவர்கள் சமர்ப்பித்ததாகக் கூறப்படுகிறது. இவை 2020ஆம் ஆண்டுக்கும் 2021ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் நிகழ்ந்த ஐந்து சாலை விபத்துகளுடன் தொடர்புடையவை.

28 வயது கோ யி மிங், 27 வயது டான் லேக் கியோங், 24 வயது லிம் யோங் ஜுன், 31 வயது சென் ஜியான்லேய், 24 வயது அலெக்ஸ் லாவ் ஆகிய ஐவர் மீதும் அரசாங்க ஊழியரிடம் பொய்த் தகவல் சமர்ப்பித்ததாகவும் மோசடி புரிய சதித்திட்டம் தீட்டியதாகவும் குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.

அவர்களுக்குத் தலா $15,000 பிணை வழங்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அதிகாரியைத் தாக்கியதாக குற்றச்சாட்டு

யுனைடெட் ஸ்குவேர் கடைத்தொகுதியில் பாதுகாப்பு அதிகாரியைத் தாக்கியதாக ஆடவர் மீது குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது.

பாதுகாப்பு அதிகாரியான 56 வயது திரு பிரகாஷ் கோவிந்தன் தாமோதரனை சீன நாட்டவரான 41 வயது வாங் லின், தாம்சன் சாலையில் உள்ள அக்கடைத்தொகுதிக்கு வெளியே இருக்கும் டாக்சி நிறுத்தத்தில் தள்ளிவிட்டதாக அறியப்படுகிறது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 6ஆம் தேதியன்று நண்பகல் அளவில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் திரு பிரகாஷ் காயமடைந்தார். அவரது இடது மணிக்கட்டில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

சிங்கப்பூர் நிரந்தரவாசியான வாங்கின் இந்த வழக்கு அடுத்த மாதம் 18 தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.