2022 முதல் காலாண்டில் 16 வேலையிட மரணங்கள்

2022 முதல் காலாண்டில் 16 வேலையிட மரணங்கள்

1 mins read
41f18b14-c6f9-4cfd-8cc7-93ddc887138c
இந்த ஆண்டு கூடுதல் வேலையிட சோதனைகள் மேற்கொள்ளப்படும் (படம்: ஸ்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப் படம்) -

இவ்வாண்டின் முதல் காலாண்டில் 16 பேர் வேலையிடங்களில் உயிரிழந்தனர். ஏப்ரல் மாதம் மட்டும் ஏழு மரணங்கள் பதிவாகின.

இவ்வாண்டுக்கான தேசிய வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார இயக்கத்தைத் தொடங்கிவைத்த மனிதவள மூத்த துணையமைச்சர் ஸாக்கி முகம்மது இந்தத் தகவல்களைத் தெரிவித்தார்.

நேற்று இரண்டு ஊழியர்கள் வேலை பார்க்கும்போது மடிந்ததாக அவர் கூறினார். அதிகரிக்கும் வேலையிட மரணங்கள் கவலையளிப்பதாக கூறிய திரு ஸாக்கி, அடிப்படை பாதுகாப்பு அம்சங்கள் பின்பற்றப்பட்டிருந்தால், சில விபத்துகள் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்றார்.

சில விபத்துகளை விசாரித்தபோது, பாதுகாப்பான பணியிட நடைமுறைகளும், கட்டுப்பாடுகளும் பின்பற்றபடவில்லை என தெரியவந்ததாக அமைச்சர் கூறினார்.

இந்நிலையில், இந்தக் காலாண்டில் வேலையிடங்களில் நடத்தப்படும் சோதனைகள் 25 விழுக்காடு அதிகரிக்கப்பட்டதாக திரு ஸாக்கி குறிப்பிட்டார்.

உயரத்திலிருந்து வேலைபார்க்ககூடிய பணியிடங்கள், பாரந்தூக்கி போன்ற கனரக இயந்திரங்களைப் பயன்படுத்தும் தளங்கள் போன்றவற்றில் கூடுதலான சோதனைகள் நடத்தப்படும் என்றார் திரு ஸாக்கி.

பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கபடும்.

சென்றாண்டு 37 பேர் பணியிடத்தில் உயிரிழந்தனர். இந்த எண்ணிக்கை 2020ஆம் ஆண்டு 30ஆகவும், 2019ல் 39ஆகவும் இருந்தது.

2028ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு 100,000 வேலையாட்களுக்கு மரண விகிதத்தை ஒன்றுக்குக் கீழ் குறைப்பது இலக்கு.