பூன் லே டிரைவில் ஆயுதம் ஏந்தி தாக்குதலில் ஈடுப்பட்டதாக நம்பப்படும் இரு ஆடவர்கள் மீது சட்டவிரோத கும்பல் உறுப்பினர்கள் எனும் மேலும் ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
20 வயதான முகம்மது சஜித் சலீம் 2020ஆம் ஆண்டு ஜூலையிலிருந்து இவ்வாண்டு ஏப்ரல் வரை குண்டர் கும்பல் உறுப்பினராக இருந்ததாக் கூறப்பட்டது.
19 வயதான மற்றொரு நபர் 2016ஆம் ஆண்டிலிருந்து இவ்வாண்டு ஏப்ரல் வரை குண்டர் கும்பலில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. ஆறு ஆண்டுகளுக்கு முன் கும்பலில் சேரும்போது அவருக்கு 14 வயது என்பதால், அவருடைய பெயரைக் குறிப்பிடமுடியாது.
இரு நபர்களும் தலா நான்கு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகின்றனர்.
இம்மாதம் 6ஆம் தேதி புளோக் 175 பூன் லே டிரைவில் உள்ள கார் நிறுத்துமிடத்தில் 22, 23 வயதுடைய இரு ஆடவர்களைத் தாக்கிவிட்டு சந்தேக நபர்கள் தப்பியோடியதாகக் கூறப்படுகிறது.
இவ்விருவரும் தலா $40,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். முன்னதாகப் பிணை தொகை $30,000ஆக இருந்தது.
சங்கங்கள் சட்டத்தின் கீழ் இருவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட பிறகு, அவர்களுக்குப் பிணை மறுக்குமாறு அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் ஆர். அறிவிந்திரன் கேட்டுகொண்டார்.
இந்த வழக்கில் சந்தேக நபர்களைப் பிரதிநிதிக்கும் வடி பிவிஎஸ்எஸ், தாக்குதல் தனிப்பட்ட சம்பவம் என்றும் இது குண்டர் கும்பல் சம்பந்தப்பட்டது அல்ல என்றும் கூறினார்.
வழக்கு மே 26ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

