'சேண்ட்லர் குட் கவர்மெண்ட்' குறியீடு எனப்படும் நாடுகளின் அரசாங்க செயல்திறனுக்கான தரவரிசையில் சிங்கப்பூர் உலக அளவில் மூன்றாவது இடத்தையும் ஆசியாவில் முதல் இடத்தையும் வகிக்கிறது.
ஃபின்லாந்து முதல் இடத்திலும் சுவிட்சர்லாந்து இரண்டாம் நிலையிலும் உள்ளன.
பட்டியலில் முதல் பத்து இடங்களில் இடம்பெற்றிருக்கும் ஒரே ஆசிய நாடு என்ற சிறப்பும் சிங்கப்பூரைச் சாரும்.
இதில் 35 குறியீடுகளைக் கொண்டு மொத்தம் 104 நாடுகள் மதிப்பிடப்பட்டன.
தலைமைத்துவமும் தொலைநோக்கும், வலுவான சட்டங்களும் கொள்கைகளும், வலுவான அமைப்புகள், நிதி மேலாண்மை, ஈர்க்கக்கூடிய சந்தை வாய்ப்புகள், உலக அளவிலான செல்வாக்கும் புகழும், மக்களின் மேம்பாட்டுக்கு உதவுதல் என்ற ஏழு பெரும் பிரிவுகளின்கீழ் நாடுகள் மதிப்பிடப்பட்டன.
ஐக்கிய நாட்டு நிறுவனம், உலக வர்த்தகை மையம், உலக நீதித் திட்டம் உள்ளிட்டவைகளின் தகவல்களை ஆதாரமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த உலகத் தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியானது.

