நேற்று முன்தினம் நடந்த இரண்டு பேருந்து விபத்துகளில் காயம் அடைந்த பயணிகள் ஐவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈசூனில் புதன்கிழமை இரவு எட்டரை மணியளவில் 'டவர் டிரான்சிட்' பேருந்து தனியார் வாடகை காருடன் மோதிய சம்பவத்தில் பேருந்தில் பயணம் செய்த நால்வர் காயமடைந்தனர்.
பேருந்துச் சேவை எண் 858, கம்பாஸ் அவென்யுவிற்கும் செம்பவாங் ரோட்டிற்கும் இடையிலான சாலைச் சந்திப்பில் இவ்வாறு மோதியது. இதையடுத்து முறையே 69 வயதும் 71 வயதும் ஆன பயணிகள் இருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இருவரும் சுயநினைவுடன் கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
பேருந்தின் ஓட்டுநர் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டதாக 'டவர் டிரான்சிட்' நிறுவனம் கூறியது.
மற்றொரு சம்பவத்தில் பாசிர் ரிஸ் டிரைவ் 1க்கும் லோயான் அவென்யுவிற்கும் இடையிலான சாலைச் சந்திப்பில் பேருந்தும் கனரக வாகனமும் மோதிக்கொண்டன.
நேற்று முன்தினம் பிற்பகல் 3.20 மணியளவில் நடந்த விபத்தில் 30 வயதுக்கும் 66 வயதுக்கும் இடைப்பட்ட பயணிகள் மூவர் சுயநினைவுடன் சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். இரு விபத்துகள் குறித்தும் காவல்துறை விசாரணை மேற்கொண்டுவருகிறது.

