வார இறுதி விடுமுறையில் விமானச் சேவைகளின் நேரம் மாறக்கூடும்
மே தினத்தை ஒட்டிய நீண்ட வார இறுதி விடுமுறையின்போது சிங்கப்பூருக்கு வந்துசெல்லும் சில விமானச் சேவைகளின் நேரம் மாற்றி அமைக்கப்படக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
உச்ச நேர நெருக்கடியைச் சமாளிக்க விமானச் சேவைகளின் நேரம் இவ்வாறு மாற்றப்படும் என்று சாங்கி விமான நிலையக் குழுமம் குறிப்பிட்டது. இதனால் மிகக் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே விமானச் சேவைகள் பாதிக்கப்படும் என்று அது கூறியது.
இம்மாதத் தொடக்கத்தில் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கு சிங்கப்பூரின் எல்லைகள் திறக்கப்பட்டதை அடுத்து விமானப் போக்குவரத்து பெருமளவு அதிகரித்துள்ளது. இந்த வாரயிறுதியில் கூடுதலான பயணிகள் சாங்கி விமான நிலையத்துக்கு வந்துசெல்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புத்தாக்க முறையில் மாற்றுப்
புரதச் சத்தை உருவாக்க புதிய ஆய்வு
முப்பரிமாண அச்சிடுதல் உள்ளிட்ட புத்தாக்க முறைகளில் மாற்றுப் புரதச் சத்தை உருவாக்குவது தொடர்பான புதிய ஆய்வு நேற்று தொடங்கப்பட்டுள்ளது.
நீடித்த நிலைத்தன்மை மிக்க முறையில் பல்வேறு பொருள்களில் இருந்து புரதத்தைப் பிரித்து எடுப்பதில் இந்த ஆய்வு கவனம் செலுத்தும். இறால் ஓடுகள், அளவுக்கு அதிகமான மீன் உணவு போன்ற மீன் வளர்ப்பில் உருவாகும் கழிவுகளும் இதில் அடங்கும்.
'புரோட்டின்ஸ் ஃபார் சிங்கப்பூர்' எனும் இந்தப் புதிய ஐந்தாண்டு ஆய்வுத் திட்டத்தை சிங்கப்பூரில் அமைந்துள்ள மியுனிக் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் ஆய்வுப் பிரிவு வழிநடத்தும்.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் தொழில்நுட்பக் கல்விக் கழகம், 'ஏஸ்டார்' ஆய்வு நிறுவனம் ஆகியவற்றின் வல்லுநர்களும் இதில் ஈடுபடுவர்.
முதல் கட்ட ஆய்வு சோயா, நுண்பாசி ஆகியவற்றில் இருந்து புரதம் தயாரிப்பதில் கவனம் செலுத்தும். மாற்றுப் புரதத்தின் சுவை, ஊட்டச் சத்து போன்றவையும் கவனத்தில் கொள்ளப்படும் என்று கூறப்பட்டது.
பொதுப் போக்குவரத்தில் இனி மின்னிலக்க 'ஈஸி லிங்க்' அட்டை
பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவோர் இனி மின்னிலக்க 'ஈஸி லிங்க்' அட்டை மூலம் அதற்கான கட்டணத்தைச் செலுத்தலாம்.
'மாஸ்டர் கார்ட்' நிறுவனத்துடன் 'ஈஸி லிங்க்' மேற்கொண்டுள்ள புதிய பங்காளித்துவம் இதற்கு வகைசெய்துள்ளது.
'பே பை வாலட்' என்பது புதிய திட்டத்தின் பெயர். இதன்கீழ் 'ஈஸி லிங்க்' செயலியின் பணப்பை அம்சத்தைப் பயன்படுத்தி இணையத்திலும் உலகெங்கும் உள்ள 80 மில்லியனுக்கும் அதிகமான 'மாஸ்டர் கார்ட்' அட்டை மூலம் கட்டணத்தை ஏற்றுக்கொள்ளும் கடைகளிலும் கட்டணத் தொகையைச் செலுத்தலாம்.
தற்போது 'ஈஸி லிங்க் வாலட்' அம்சத்தைப் பயன்படுத்திக் கட்டணம் செலுத்துவோர் 'ஈஸி லிங்க்' செயலியின் மூலம் இந்தப் புதிய நடைமுறையைச் செயல்படுத்தலாம்.
'சிங்பாஸ்' செயலியில் இருந்து தனிப்பட்ட விவரங்களைப் பதிவிறக்கம் செய்து இதற்கான விண்ணப்பத்தில் பூர்த்தி செய்யப் பயன்படுத்தலாம்.
'பே பை வாலட்' மின்னிலக்க அட்டையை 'கூகுள் பே'யுடன் இணைத்து கைத்தொலைபேசி மூலம் கட்டணத்தைச் செலுத்த இயலும்.
தற்போது 'ஆண்ட்ராய்ட்' ரக கைத்தொலைபேசிகளுக்கு மட்டும் பொருந்தும் இந்தத் திட்டம் நாளடைவில் 'ஐஓஎஸ்' பயனாளர்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.

